search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடு ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
    X
    நடு ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

    நத்தம் அருகே சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து சாலை மறியல்-கடையடைப்பு

    நத்தம் அருகே சப்-இன்ஸ் பெக்டர் நள்ளிரவில் வீடு புகுந்து வாலிபரை கைது செய்ததை கண்டித்து கிராம மக்கள் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செந்துறை:

    நத்தம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக ஹெல்மெட் தொடர்பாக வாகன சோதனை நடத்தப்பட்டு வந்தது. இதில் நேற்று முன் தினம் நடந்த வாகன சோதனையின் போது மல்லநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வடிவேல் (வயது 40), பாறைப்பட்டியைச் சேர்ந்த முருகன் (33), தண்டபாணி (25), சக்தி (35), செந்துறையைச் சேர்ந்த செல்வக்குமார் (40), சித்திரைக் கவுண்டன் குளத்தைச் சேர்ந்த அழகுபாண்டி (25) ஆகியோர் ஹெல்மெட் அணியாமல் வந்ததாக போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    இதனையடுத்து போலீஸ் நிலையத்துக்கு வந்து எழுதி கொடுத்து விட்டு திங்கட்கிழமை காலையில் தாங்கள் ஆஜராவதாக கூறிச் சென்றனர்.

    நேற்று நள்ளிரவில் செந்துறை வந்த சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் தலைமையிலான போலீசார் ராஜேந்திரன் மகன் செல்வக்குமாரை துப்பாக்கி முனையில் மிரட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதே போல வாகன சோதனையில் வழக்குபதிவு செய்யப்பட்ட 7 பேர்களையும் நள்ளிரவில் அழைத்துச் சென்றனர்.

    அப்போது செந்துறையைச் சேர்ந்த ராஜேந்திரன் போலீசாரிடம் தான் ஏற்கனவே இன்ஸ்பெக்டரிடம் பேசியுள்ளதாகவும், நாளை காலை நாங்களே போலீஸ் நிலையம் வருகிறோம். நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ய கொலை குற்றமா செய்தோம் என கேட்டுள்ளார். அதற்கு போலீசார் அவர்களையும் தடுத்து நிறுத்தி செல்வக்குமாரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    நள்ளிரவில் போலீசார் வீடு புகுந்து கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி செந்துறை பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் செந்துறை பஸ்நிலையத்தில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் ராஜமுரளி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மக்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் உருவானது. 

    Next Story
    ×