search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
    X
    அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

    அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்றி வருவது அதிமுக மட்டுமே- அமைச்சர் சீனிவாசன் பேச்சு

    அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்ற எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவைத் தொடர்ந்து தற்போது முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாடுபட்டு வருகின்றனர் என்று அமைச்சர் சீனிவாசன் பேசியுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நாகல்நகரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக பேச்சாளர் அனுமோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 

    கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவருக்கு உற்ற துணையாக இருந்தவர் எம்.ஜி.ஆர்., அண்ணாவை முதல்வராக அமர வைக்க அவர் தீவிரமாக களப்பணியாற்றினார். அண்ணாவின் மறைவுக்கு பிறகு கருணாநிதியின் சூழ்ச்சியால் தி.மு.க.வை விட்டு விலகிய எம்.ஜி.ஆர். தனி இயக்கம் கண்டார். அண்ணாவின் உருவத்தை தனது கட்சியின் சின்னமாக பொறித்து அதன் பிறகு வெற்றி மேல் வெற்றி கண்டார்.

    அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்ற எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவைத் தொடர்ந்து தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாடுபட்டு வருகின்றனர்.

    கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை ஸ்டாலினை கட்சியின் தலைவராகவோ, முதல்வராகவோ அறிவிக்க வில்லை. அவருக்கு பிறகுதான் தி.மு.க.வின் தலைவராக ஸ்டாலின் பதவியேற்றார்.

    தற்போது அவருக்கு பின் உதயநிதியை பதவியில் அமர்த்த கட்சியினர் தயாராகி வருகின்றனர். அவருக்கு பின் ஸ்டாலினின் பேரன் தி.மு.க.வுக்கு தலைவராக வருவார். அதனால்தான் தி.மு.க.வை குடும்ப கட்சி என்கிறோம். அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வாரிசு அரசியலை வளர்க்க வில்லை.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றவுடன் அ.தி.மு.க. இதோடு அழிந்து விட்டது என பேசி வந்தனர். ஆட்சியையும், சபாநாயகரையும் மாற்ற கவர்னரிடம் மனு அளித்தனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக கூறிய ஸ்டாலின் திடீரென அதனை வாபஸ் பெற்றார்.

    வேலூர் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றது. அதிலும் கூட 3 சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வின் வாங்கு வங்கி அதிகரித்தது. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்ற போதும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது.

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் வெளிநாடு சுற்றுப் பயணம் சென்றதற்கு வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்டாலின். ரூ.8300 கோடி மதிப்பீட்டில் 41 தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 35 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இத்திட்டம் நடைமுறைக்கு வரும் போது அதன் வெற்றி புரிய வரும்.

    திண்டுக்கல்லில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று சீரான குடிநீர் வினியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. எனவே கட்சியினர் அரசின் சாதனைகளை எடுத்து கூறி அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×