search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பணத்தகராறில் காரில் விவசாயி கடத்தல் - 2 பேர் கைது

    மன்னார்குடி அருகே பணத்தகராறில் விவசாயியை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்தவர் ஆசைதம்பி. இவர் வேளாங்கண்ணியைச் சேர்ந்த சேர்ந்த குகனிடம் வேலை வாங்கி தரக்கோரி ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். அதனை திருப்பி கேட்ட ஆசை தம்பியை குகனும், அவரது உறவினர்களும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஆசைதம்பி பெருகவாழ்ந்தான் அருகே கெழுவத்தூரில் வசிக்கும் தனது அத்தான் ஜோதிபாசு (வயது 65) என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜோதிபாசு, குகனின் போன் எண்ணை வாங்கி அவருடன் பேசி பணத்தை கொடுத்துவிடும்படி கண்டிப்புடன் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த குகனின் உறவினர்கள் உள்பட 6 பேர் கார்களில் ஜோதிபாசு வீட்டிற்கு இன்று அதிகாலை 2 மணி அளவில் சென்று அவரை காரில் கடத்தி சென்றுள்ளனர். இதுபற்றி அவரது குடும்பத்தினர் பெருகவாழ்ந்தான் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு அனைத்து சாலைகளிலும் வாகன சோதனை நடத்தினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கடத்தல் கும்பல் கார்களை வயல்வெளி பகுதிக்கு ஓட்டி சென்று ஜோதிபாசுவை இறக்கி விட்டு திரும்பி சென்றனர்.

    அப்போது போலீசார் 2 கார்களையும் மடக்கினர். இதனால் சுதாரித்துக் கொண்ட கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் தப்பி ஓடி விட்டனர். கார்களை ஓட்டி வந்த டிரைவர்களான அன்பு செல்வம் (45), ரவிச்சந்திரன் (23) ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் வரவழைத்த இன்னொரு காரும் பிடிபட்டது. 3 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடத்தப்பட்ட ஜோதிபாசு விவசாயி ஆவார். அவரை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு அவரை கடத்திய நபர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

    பணத்தகராறில் விவசாயியை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×