search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஞ்சா
    X
    கஞ்சா

    இளம்பெண் உள்பட 8 பேர் கைது: பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கும்பல்

    சென்னை மாநகரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கும்பல் பிடிப்பட்டது. 4 நாளில் 50 கிலோ விற்றுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாநகரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அண்ணாசாலை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் விசாரணை நடத்தியதில் மதுரை மேலூரை சேர்ந்த சிங்கராஜ் என்பவர் அடையாறு பகுதியில் தனியாக அறை எடுத்து சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ஐ.டி. ஊழியர்களுக்கும் கஞ்சா சப்ளை செய்வது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    சிறிய சிறிய கஞ்சா பொட்டலங்கள் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் தனக்கு 1,400 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும் அதில் பெரும்பாலானோர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் என்ஜினீயர்கள் என்று சிங்கராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மதுரவாயல் பகுதியில் வசிக்கும் பாண்டி, ஆந்திரமாநிலம் நெல்லூரைச் சேர்ந்த பிரியலட்சுமி, தேனாம்பேட்டை பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி ஆகியோரிடம் மொத்தமாக கஞ்சாவை வாங்கி தனது அறையில் வைத்து பிரித்து தனக்கு தொலைபேசியில் கஞ்சா கேட்கும் நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்ததாகவும் அவர் கூறினார். சிங்கராஜின் அறையில் சுமார் 4 கிலோ கஞ்சா இருந்தது.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் பாண்டி, செல்வம், துரை, வரதராஜ் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 36 கிலோ கஞ்சாவும், ஆட்டோவும் கைப்பற்றப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் வசிக்கும் பிரியலட்சுமி, தேனாம்பேட்டை பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி. அவரது மகன் சூரியபிரகாஷ் (எ) சூர்யா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    சிங்கராஜ் தனது வாக்கு மூலத்தில் சென்னை நகரில் 4 நாள் வியாபாரத்துக்கு தனக்கு 50 கிலோ கஞ்சா தேவைப்படும் என்று திடுக்கிடும் தகவலையும் கூறியுள்ளார்.

    Next Story
    ×