search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையை கடந்த காட்டு யானைகள்
    X
    சாலையை கடந்த காட்டு யானைகள்

    தேன்கனிக்கோட்டை அருகே சாலையை கடந்த காட்டு யானைகளால் பரபரப்பு

    தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானைகள் சாலையை கடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் வருவது அவ்வப்போது நடந்து வருகிறது. மேலும், அவைகள் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி செல்கின்றன.

    இந்த நிலையில் நேற்று அய்யூர் வனப்பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தன. இதைத் தொடர்ந்து அவைகள் அய்யூர்-பெட்டமுகிலாளம் செல்லும் சாலையை கடந்து சென்றன.

    இதைப் பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டனர்.

    யானைகள் அனைத்தும் சாலையை கடந்த பின்னரே வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். காட்டு யானைகள் திடீரென சாலையை கடந்து சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×