
மத்திய அரசின் கல்வித்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்து சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக கூறி இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
நடப்புக் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தமுடிவை கைவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
மத்திய அரசின் அறிப்பின்படி தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இது பொதுமக்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏனென்றால், 1 முதல் 8 வரை படித்துவிட்டு செல்லும் மாணவர்கள், உயர்நிலை படிப்பு மற்றும் மேல்நிலைப் படிப்புகளுக்கு செல்லும்போது, இப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொதுத் தேர்வுகளை சந்திக்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.
ஆகவே, 5 மற்றும் 8-ம் வகுப்பில் பொதுத்தேர்வு வரும்போது, ஆசிரியர்கள் எப்படி மாணர்களுக்கு கற்று தருகிறார்கள்? கற்றல்திறன் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்கு ஏதுவாக அமையும். எனவே, தமிழகத்தைப் பொருத்தவரை, இதற்காக 3 ஆண்டு காலம் முதலமைச்சர் விதிவிலக்கு அளித்திருக்கிறார். தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படமாட்டாது.
3 ஆண்டு காலத்திற்கு பிறகு இது முழுமையாக அமல்படுத்தப்படும். இந்த பொதுத்தேர்வு வருவதால் இடைநிற்றலுக்கு வாய்ப்பு இல்லை. 3 ஆண்டு காலம் வரை மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.