search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுபஸ்ரீ
    X
    சுபஸ்ரீ

    சுபஸ்ரீ பலி - பேனர் கலாசாரத்தை தவிர்க்க அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள்

    சென்னையில் பேனர் சரிந்து விழுந்து பெண் என்ஜினீயர் பலியான சம்பவத்தின் எதிரொலியாக பேனர் கலாசாரத்தை தவிர்க்க அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    பெண் என்ஜினீயர் சுபஸ்ரீயின் உயிர் இழப்புக்கு அ.தி.மு.க.வினரின் சட்டவிரோத ‘டிஜிட்டல்’ பேனர் நடவடிக்கையே காரணம். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இந்த உயிர் இழப்புக்கு பிறகாவது அ.தி.மு.க. சார்பில் டிஜிட்டல் பேனர்களை எவரும் வைக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது கட்சியினருக்கு கட்டளை பிறப்பிப்பாரா?

    சுபஸ்ரீயின் உயிர் இழப்புக்கு உண்மையிலேயே மதிப்பு கொடுப்பதாக இருந்தால், இத்தகைய அறிவிப்பை முதல்-அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும். சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அ.தி.மு.க. அறக்கட்டளையில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    பேனர்கள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் ஆகும். பேனர்களை தவிர்ப்போம், நாகரிகம் காப்போம். பேனர்கள் அமைத்தவர்களுக்கு அபராதம் விதித்த பா.ம.க.வுக்கு மட்டுமே இப்படி கூறும் உரிமை உண்டு.

    தூத்துக்குடியில் என்னை வரவேற்று வைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றிய பிறகே விழாவில் பங்கேற்றேன். புதுச்சேரியிலும் எனது நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றியதுடன், பேனர் வைத்தவர்களுக்கு அபராதமும் விதித்தேன்.

    பா.ம.க. நிகழ்ச்சிகளுக்கு பேனர்கள், கட்-அவுட்களை வைக்கக்கூடாது என்ற எனது ஆணை இன்றும், என்றும், பா.ம.க. நிர்வாகிகளால் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த விதியை மீறுவது குறித்து பா.ம.க.வினர் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

    த.மா.கா. கட்சியினர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலைகளிலும், வீதிகளிலும், பொது இடங்களிலும் விளம்பரங்கள் செய்யக்கூடாது. குறிப்பாக த.மா.கா. நிர்வாகிகள் பேனர்கள், போர்டுகள், கட்-அவுட்டுகள், போஸ்டர்கள் போன்றவற்றை விதிகளுக்கு உட்பட்டு எங்கு வைக்க அனுமதி உண்டோ அங்கு மட்டும் முறையாக அனுமதி பெற்று வைக்க வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    இளம்பெண் சுபஸ்ரீ விபத்தில் சிக்கி பலியானது வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக அரசு, விளம்பர பேனர் தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் நிகழ்ச்சிகளில் விளம்பர பேனர்கள் அமைக்கும் போக்குகளை முற்றாக கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

    பொதுமக்களுக்கு இடையூறாகவும், விதிமுறைகளை மீறியும் பேனர், கட்-அவுட் வைக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உயிர் இழந்த பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். சுபஸ்ரீயின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரையில் தலைவர்கள் பிறந்தநாள், பாராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. திருமண நிகழ்ச்சிகளின் போதும் விதிமுறைகளை மீறி கட்-அவுட், பேனர்கள் வைப்பது இல்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

    இதேபோல் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோரும் பேனர் கலாசாரத்தை தவிர்க்க வேண்டும் என்று தங்கள் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர். 
    Next Story
    ×