search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுபஸ்ரீயின் உடல் பொதுமக்கள் உதவியுடன் சரக்கு வேனில் ஏற்றப்பட்ட காட்சி
    X
    சுபஸ்ரீயின் உடல் பொதுமக்கள் உதவியுடன் சரக்கு வேனில் ஏற்றப்பட்ட காட்சி

    நீண்டநேரம் சாலையில் கிடந்த சுபஸ்ரீ உடல் - 2 மணிநேரத்துக்கு பிறகு சரக்கு வேனில் ஏற்றிச்சென்ற பரிதாபம்

    ‘பேனர்’ விழுந்ததில் பலியான சுபஸ்ரீயின் உடலை மீட்டு இந்த வழக்கை யார் விசாரிப்பது? என்ற பிரச்சினையில் நீண்டநேரம் அவரது உடல் சாலையில் கிடந்தது. 2 மணி நேரத்துக்கு பிறகு அவரது உடலை சரக்கு வேனில் ஏற்றிச்சென்றனர்.
    சென்னை:

    பேனர் விழுந்ததில் பலியான சுபஸ்ரீயின் உடலை மீட்டு, இந்த வழக்கை யார் விசாரிப்பது? என பரங்கிமலை போக்குவரத்து போலீசாருக்கும், பள்ளிக்கரணை சட்டம்-ஒழுங்கு போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் சுபஸ்ரீயின் உடல் நீண்டநேரமாக சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.

    சுமார் 2 மணிநேரத்துக்கு பிறகு பரங்கிமலை போக்குவரத்து போலீசார், பொதுமக்கள் உதவியுடன் சுபஸ்ரீயின் உடலை மீட்டு, போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையின் எதிர்புறமாக தூக்கிச்சென்று மினிலோடு வேனில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்த பகுதியில் போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அது இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என தெரிகிறது.

    ஆனால் அருகில் உள்ள கார் உதிரிப்பாகங்கள் விற்பனை கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில், சாலையின் நடுவில் கட்டி இருந்த ‘பேனர்’ காற்றில் பறந்து சென்று ஸ்கூட்டரில் செல்லும் சுபஸ்ரீ மீது விழுவதும், இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    சாலையின் நடுவில் இருந்த ‘பேனர்’ சரிந்து விழுவதும், சுபஸ்ரீ ஸ்கூட்டரில் செல்வதும் படத்தில் காணலாம்.


    அத்துடன் பலியான சுபஸ்ரீயின் உடல் ஆம்புலன்சில் ஏற்றாமல் சரக்கு வேனில் ஏற்றிச்செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. நேற்று அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.

    ஆம்புலன்ஸ் இன்றி லோடு வேனில் அவரது உடலை ஏற்றிச்சென்ற கொடூர காட்சியை பார்த்தவர்களின் நெஞ்சத்தை பதைபதைக்க வைத்தது.
    Next Story
    ×