search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    திருச்சி அருகே ரெயில்வே ஊழியர் தாய் உள்பட 2 பேரிடம் 10 பவுன் நகை பறிப்பு

    திருச்சி அருகே ரெயில்வே ஊழியர் தாய் உள்பட 2 பேரிடம் 10 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகரில் இதற்கு முன்பு அடிக்கடி செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. அதில் ஈடுபட்ட வாலிபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க திருச்சி மாநகரில் ஆயிரக்கணக்கான கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கேமிரா வளையத்திற்குள் மாநகரம் கொண்டு வரப்பட்டது. இதனால் செயின்பறிப்பு கொள்ளையர்கள் கிராமங்களில் கைவரிசை காட்ட தொடங்கி உள்ளனர்.

    நேற்று மணப்பாறை அருகே மஞ்சம்பட்டி கல்லறை தோட்டம் அருகில் நடந்து சென்ற திருச்சி ரெயில்வே ஊழியரின் தாய் பாத்திமா ராணி (வயது 59) என்பவரின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றனர்.

    அதேபோன்று முசிறி கோட்டூரை சேர்ந்த வெற்றி வீரன் என்பவரின் மனைவி சரோஜா (59) என்பவர் கோட்டூர்-ஆம்பூர் இடையே குணசீலம் பிரிவு வாய்க்கால் பகுதி அருகே மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சரோஜாவிடம் வாழை தோப்பிற்கு தேவையான சவுக்கு கம்புகள் எங்கே கிடைக்கும் என்று கேட்டார்.

    சரோஜா பதில் கூறிக் கொண்டிருந்தபோது திடீரென அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார். நகையை பறிகொடுத்த சரோஜா வாத்தலை போலீசிலும், பாத்திமாராணி மணப்பாறை போலீசிலும் புகார் செய்தனர்.

    திருச்சி மாநகரில் கைவரிசை காட்டி வந்த சங்கிலி பறிப்பு கும்பல் கிராமங்களில் தனியாக ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நடந்து செல்லும் பெண்கள், ஆடு, மாடு மேய்க்கும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே கடந்த வாரம் திருச்சி செல்வநகர் விஸ்தரிப்பு பகுதியில் கடை நடத்தி வரும் இமாகு லேட் எழலரசி என்பவர் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு கார்த்திகை வீதி வழியாக நடந்து சென்றபோது மர்மநபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்து சென்றான்.

    தனிப்படை போலீசார் அந்த வாலிபரை தேடி வந்த நிலையில் செயினை பறித்தது புஜிஇம்ரான் என்பது தெரிய வந்தது. ஏற்கனவே இவர் மீது உறையூர், அரசு மருத்துவ மனை போலீஸ் நிலையம் உள்பட பல இடங்களில் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன.

    போலீசார் தேடிவந்த நிலையில் புத்தூர்எம்.ஜி.ஆர். சிலை அருகில் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்திய போது சிக்கினான். புஜிஇம்ரானை திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    செயின் பறிப்பில் ஈடுபடும் கொள்ளையர்கள் அந்த நகைகளை அடகு கடைகளில் குறைந்த விலைக்கு விற்று உடனே பணமாக்கி விடுகிறார்கள். தற்போது திருச்சியில் நகை அடகு கடைகளை போலீசார் கண்காணிப்பதால் வெளி மாவட்டங்களில் நகைகளை விற்று விடுவதாக தெரியவந் துள்ளது.

    Next Story
    ×