search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

    திமுக நிகழ்ச்சிக்காக யாரும் பேனர், கட் அவுட் வைக்கக் கூடாது -மு.க.ஸ்டாலின் உத்தரவு

    திமுக நிகழ்ச்சிகளுக்காக எவ்வித பேனர்களும், கட் அவுட்களும் இனி வைக்கக் கூடாது என தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    சென்னையில் சுபஸ்ரீ (23 வயது), என்ற இளம்பெண் நேற்று பள்ளிக்கரணையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது.

    அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு பலரும் தங்கள் கண்டனத்தையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. மேலும் அந்த பேனர்களை அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.  இந்த விபத்து குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது.

    அவருக்கு என் இரங்கல். அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?’ என ஆவேசத்துடன்  கூறினார்.

    இந்நிலையில் திமுகவின் நிகழ்ச்சிகளுக்காக எவ்வித பேனர்களும், கட் அவுட்களும் தொண்டர்கள் வைக்கக் கூடாது எனவும், மீறி வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    Next Story
    ×