search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள்

    போடி, கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் பயிர்களை நாசம் செய்தன.
    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான தாண்டிக்குடி, தடியன்குடிசை, பெரும்பாறை, பண்ணைக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை, காப்பி, ஆரஞ்சு உள்ளிட்டவைகளை பயிரிட்டு வருகின்றனர். விவசாய நிலங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடுகின்றன.

    மேலும் விவசாய பயிர்களையும் நாசம் செய்வதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தடியன்குடிசை பகுதியில் 2 குட்டிகளுடன் 5 யானைகள் முகாமிட்டன. இந்த யானைகள் வாழை, காப்பி பயிர்களை சேதப்படுத்தின.

    அருகில் இருந்த தோட்டத்தின் சோலார் மின்வேலிகளையும் பிடுங்கி வீசின. தாண்டிக் குடியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்க இவர் திண்டுக்கல்லுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது அவரை வழிமறித்த காட்டு யானைகள் அவரை விரட்டின. இதனால் அவர் அச்சமடைந்து அருகிலிருந்த குடியிருப்பு பகுதியில் தஞ்சம் அடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் வனச்சரகர் செந்தில்குமார், வனவர் முத்துச்சாமி, வனக்காப்பாளர்கள் பாண்டி, கணேசன் உள்ளிட்ட வனத்துறையினர் தடியன்குடிசை பகுதிக்கு சென்று வெடி வெடித்து யானைகளை அடர்ந்த பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    2 நாட்களாக அங்கேயே தங்கி இரவும், பகலும் கண்காணித்து வருகின்றனர். காட்டு யானைகள் பீதியால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களுக்கு செல்ல அச்சமடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    தேனி மாவட்டம் போடி அருகே தேவாரம், சாக்கலூத்து மெட்டு பகுதியில் நீண்டநாட்களாக மக்னா யானை அட்டகாசம் செய்து வருகிறது. இந்த யானையை பிடிக்க கோவையில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. தொடர்ந்து மக்னா யானையால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் சாக்கலூத்து மெட்டு பகுதியில் சியாமளா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 2 காட்டு யானைகள் புகுந்தன. அங்கு பயிரிட்டிருந்த தக்காளி மற்றும் கப்பை கிழங்குகளை சேதப்படுத்தின.

    தொடர்ந்து காட்டு யானைகளால் பாதிக்கப்பட்டு வருவது விவசாயிகளுக்கு மேலும் ஒரு பேரிடியாக உள்ளது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    Next Story
    ×