search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் தங்கமணி
    X
    அமைச்சர் தங்கமணி

    தமிழகத்தில் மின்சார கட்டணம் தற்போது உயர்த்தப்படாது: அமைச்சர் தங்கமணி

    தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (டான்ஜெட்கோ) நிதி நெருக்கடி இருந்தாலும், தமிழகத்தில் தற்போது மின்சார கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
    சென்னை :

    தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (டான்ஜெட்கோ) நிதி நெருக்கடி இருந்தாலும், தமிழகத்தில் தற்போது மின்சார கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

    இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி அளித்த பதில் வருமாறு:-

    தமிழகத்தில் மின்சாரக் கட்டணத்தை மாற்றுவதற்கு எங்களிடம் தற்போது எந்த முன்மொழிவும் இல்லை. புதிய மின்சார இணைப்புகளுக்கான கட்டணத்தைத்தான் திருத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டி.என்.இ.ஆர்.சி.) செயல்படுகிறது. ஆனாலும் அதில் ஒரு முடிவு எட்டப்படவில்லை.

    இந்த ஆண்டு டான்ஜெட்கோ மிகப்பெரிய நிதி நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. நிதி நெருக்கடி நீடித்து வந்தாலும், அதை மக்களை நோக்கித் திருப்ப எங்களுக்கு விருப்பம் இல்லை.

    நிதி நெருக்கடி இருந்தாலும், இன்னும் சில மாதங்களுக்கு மின்சார கட்டண உயர்வு இருக்காது. முதல்-அமைச்சர் தற்போதுதான் சென்னை திரும்பியுள்ளார். அவரிடம் இதுபற்றி கலந்து பேச வேண்டியதுள்ளது.

    மின்வாரியம்

    இந்த சூழ்நிலையில் டி.என்.இ.ஆர்.சி.க்கு இந்த ஆண்டுக்குத் தேவையான வருவாய் அளவைக்கூட முன்வைக்கவில்லை. இந்த ஆண்டுக்கு மட்டும் டான்ஜெட்கோவின் நிதிச்சுமை ரூ.7 ஆயிரம் கோடியாக உள்ளது. ஏன் இந்த நிலை என்றால், மின்சார கட்டமைப்புகளுக்கு கஜா புயல் செய்த பாதிப்பு அந்த அளவில் இருந்தது. இதற்காக மட்டுமே ரூ.2,500 கோடியை செலவு செய்ய வேண்டியதாகிவிட்டது.

    சம்பள கமிஷனின் பரிந்துரைகளை அமலாக்குவதில் ரூ.1,200 கோடி கூடுதல் செலவு செய்தோம். அவை தவிர நிலக்கரியின் விலை, அவற்றை கொண்டு வரும் செலவு, மத்திய தொகுப்பில் இருந்து பெறும் மின்சாரத்தின் விலை ஆகியவை அனைத்தும் உயர்ந்துவிட்டன. மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் விலை யுனிட் ஒன்றுக்கு ரூ.0.44 உயர்ந்திருக்கிறது.

    காற்றாலை மின்சாரம் சிறிதளவாகத்தான் உள்ளது. காற்று வீசும் காலமும் முடிவுக்கு வர இருக்கிறது. எனவே அனல் மின்சார யூனிட்களை தயாராக வைத்திருக்கிறோம். நிலக்கரி சேமிப்பையும் உயர்த்தியுள்ளோம். இந்த ஆண்டு எந்த இடத்திலும் மின்வெட்டு ஏற்படவில்லை.

    காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்துவதில் எங்களுக்கும், காற்றாலை நிறுவனங்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சினைகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விசாரணையில் உள்ளன. இதுபோன்ற பிரச்சினைகளால் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பை நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×