search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர்
    X
    ஆசிரியர்

    ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கி உள்ள 1000 ஆசிரியர்கள்- காரணம் இதுதான்

    பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களில் சுமார் 1000 பேர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.
    சென்னை:

    பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தியதில் மதிப்பெண்கள் மாற்றம் ஆகி இருப்பது தெரியவந்தது. விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பித்தபோது மதிப்பெண்களில் வித்தியாசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    5000 மாணவர்கள் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்து இருந்ததில் முறையாக திருத்தம் செய்யப்படாமலும் கவனக்குறைவாக செயல்பட்டதாலும் 1500 மாணவர்களின் மதிப்பெண் குறைவாகிபோனது. 80 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவிக்கு 8 மதிப்பெண் பெற்றதாகவும், 15 மதிப்பெண்கள் வரை விடைத்தாள்களில் மாறுபட்டு இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து விடைத்தாள்களை திருத்தம் செய்த ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்களை அரசு தேர்வுத்துறை விசாரணைக்கு வரவழைத்து எச்சரித்தது. மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடக்கூடாது. விடைத்தாள் திருத்தம் செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும் என்று எச்சரித்தது. மேலும் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் கவனக்குறைவாக செயல்பட்ட சுமார் 1000 ஆசிரியர்கள் கொண்ட பட்டியலை பள்ளி கல்வித்துறை இயக்குனரிடம் ஒப்படைத்துள்ளது.

    மாணவர்களின் விடைத்தாள் பக்கங்களை முறையாக எண்ணாமல் மதிப்பெண் குறைந்துள்ளது, கூட்டல் தவறு உள்ளிட்ட பல்வேறு விதமான கவனக்குறைவுகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. ஒரு மாணவன் 78 மதிப்பெண் பெற்று இருந்தார். ஆனால் அவர் 7 மதிப்பெண் பெற்று இருப்பதாக பதிவாகி உள்ளது.

    விடைத்தாள் திருத்துவதில் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். அவர்களிடம் விளக்கம் கேட்டு பெறவும் தேவைப்பட்டால் மேல் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    விடைத்தாள் மதிப்பெண்கள் வித்தியாசம் அதிகமாக இருக்குமாயின் அந்த ஆசிரியர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அவர்களின் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு பாதிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

    ஆசிரியர்கள்

    இதுபற்றி ஆசிரியர்கள் கூறுகையில், விடைத்தாள் திருத்த பயன்படுத்தப்படும் ஆன்சர் ஸ்கிரிப்டில் 65 வினாக்கள் இருந்தன. பாடத்தின் மதிப்பெண் 100 ஆக குறைக்கப்பட்ட பிறகு வினாக்களின் எண்ணிக்கை 44 ஆக குறைந்தது. இதனால் ஆசிரியர்கள் வினாக்களை மதிப்பீடு செய்யும்போது தவறவிட்டு விட்டனர்.

    மேலும் பொதுத்தேர்தல் நடப்பதால் விடைத்தாள் திருத்தும் பணியை வேகப்படுத்தியதும் இந்த தவறுக்கு காரணம் என்று தெரிவித்தனர். இதனை பள்ளிக் கல்வித்துறை மறுத்துள்ளது.

    Next Story
    ×