
திருச்செங்கோடு கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் மணிகண்டன் (வயது 29). இவர் திருச்செங்கோடு - சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் எடுத்தார். பின்னர் ஸ்டேட்மெண்ட் எடுக்க தெரியாமல் இருந்த நிலையில், ஒரு மர்ம ஆசாமி தானே முன்வந்து ஸ்டேட்மெண்ட் எடுக்க உதவி செய்வதாக கூறி அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கி ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டு, பிறகு ஸ்டேட்மெண்ட் வரவில்லை எனக்கூறி ஏ.டி.எம். கார்டை மணிகண்டனிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.
பின்னர் மணிகண்டன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அவரது வங்கி கணக்கில் ரூ.9,400 எடுத்துள்ளதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. அவர் அந்த மர்ம ஆசாமியால் தான் ஏமாற்றப்பட்டதையறிந்து திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் ஏ.டி.எம். ரகசிய எண்ணை பயன்படுத்தி லாரி டிரைவரின் வங்கி கணக்கில் பணம் அபேஸ் செய்த மர்ம ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். மைய கண்காணிப்பு கேமரா மூலம் அந்த மர்ம ஆசாமியின் உருவம் பதிவாகியுள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.