search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் வேலுமணி
    X
    அமைச்சர் வேலுமணி

    திருச்சியில் இன்று அதிகாரிகளுடன் அமைச்சர் வேலுமணி ஆலோசனை

    திருச்சியில் இன்று மழைநீர் சேகரிப்பு, வளர்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் வேலுமணி ஆலோசனை நடத்தினார்.

    திருச்சி:

    திருச்சியில் இன்று நடைபெற்ற ஆய்வுகள் மற்றும் கருத்தரங்குகளில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பங்கேற்றார். முன்னதாக இன்று காலை திருச்சி அஜந்தா ஓட்டலில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மையத்தை ஆய்வு செய்தார்.

    பின்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருச்சி தில்லை நகரில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள சேராப்பட்டி ஊராட்சி வேலப்புடையான்பட்டியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் குஜிலியான்குளம் குடி மராமத்து பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் மதயானிப் பட்டியில் நடைபெற்று வரும் குடிநீர் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி திட்டப்பணியை ஆய்வு செய்தார்.

    இதையடுத்து திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடலில் பங்கேற்றார். இதில் 8 மாவட்ட அதிகாரிகளுடன் நீர் மேலாண்மை குறித்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 3 அல்லது 6 மாதங்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றார்கள். ஆனால் 3 வருடங்களை தாண்டி ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. விளம்பரம் செய்யாத முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். தமிழகத்தில் மழை இல்லாத சூழ் நிலையில் குடிநீர் கேட்டு உள்ளாட்சித்துறை அதிகாரிகளைத்தான் பொதுமக்கள் அணுகுகிறார்கள்.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு திட்டப்பணிகளை அரசு செய்து வருகிறது. இதில் ஏரி, குளங்களை தூர்வார முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.500 கோடி நிதி ஒதுக்கினார். இதன் மூலம் ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டுள்ளதால் பல்வேறு நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைக்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இருந்தபோதே இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது குடிநீர் பிரச்சினை நிலவுவதால் மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

    எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பொதுமக்களை எளிதில் அணுகி திட்டத்தை நிறைவேற்றலாம். மூன்று மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி அமைக்காத பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். அந்தந்த பகுதி அமைச்சர்கள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் வீடுகள், கட்டிடங்களில் அமைக்கப்படும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஆய்வு செய்வார்கள். இதற்காகவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. மதுரையில் முதல்கட்ட கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 5 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இன்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் 8 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில் இரண்டு மாகராட்சி, 14 நகராட்சி, 70 பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பஞ்சாயத்து அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். அனைவரும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நிறைவேற்ற தீவிர பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவல கத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர், பின்னர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்.

    Next Story
    ×