search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கலெக்டர் அலுவலகத்தில் அலைமோதிய கூட்டம் - தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் கேட்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள அம்பாத்துரை ஊராட்சி அமலி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தெரிவிக்கையில், இப்பகுதியில் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 5 போர்வெல்கள் இருந்தும் தண்ணீர் வரவில்லை.

    காவிரி கூட்டுக்குடிநீர் மூலம் இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னாளப்பட்டி முதல் கொடைரோடு வழியாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. அப்போது எங்கள் பகுதிக்கு தண்ணீர் வழங்கும் குடிநீர் பைப்புகள் துண்டிக்கப்பட்டது.

    இதனால் தண்ணீர் இல்லாமல் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    திண்டுக்கல்-மதுரை சாலையில் அவர்லேடி பள்ளி அருகே இன்று 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர்கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நகர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் சமத்துவபுரம் உள்ளது. 130 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் வினியோகம் இல்லாததால் இப்பகுதி மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வந்தனர். அந்த தண்ணீரும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

    நிலக்கோட்டையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள புகார் மனுவில் நாங்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்காக முதலாம் ஆண்டே விண்ணப்பம் அளித்தோம். ஆனால் இது வரை எங்களுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை. எங்களைப் போல 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் அரசின் உதவித் தொகைக்காக காத்திருக்கிறோம். எனவே மாணவிகளின் கல்வி நலனில் அக்கறை கொண்டு விரைந்து உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களுக்கு பட்டா வழங்க கேட்டு கொடைக்கானல் ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் இன்று தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கேட்டு மனு அளித்தனர்.

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குறை தீர் கூட்டம் நடைபெறவில்லை. அதற்கு முந்தைய வாரமும் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் இன்று கலெக்டர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மனுக்கள் அளிக்க குவிந்தனர். குறைதீர் பிரிவில் நீண்ட வரிசையில் மக்கள் மனுக்கள் அளிக்க காத்திருந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
    Next Story
    ×