search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.
    X
    வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.

    தஞ்சையில் வெள்ளையன் தலைமையில் வியாபாரிகள் ‘திடீர்’ ஆர்ப்பாட்டம்

    தஞ்சையில் பழைய பஸ் நிலையம் மூடப்பட்டதை கண்டித்து வெள்ளையன் தலைமையில் வியாபாரிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிக்காக பழைய பஸ் நிலையம் நேற்று மூடப்பட்டது. மேலும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இரும்பு தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பொது மக்களின் வசதிக்காக தஞ்சை காசி பிள்ளையார் கோவில் அருகில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. நேற்று முதல் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன.

    இதற்கிடையே பழைய பஸ் நிலைய பகுதிகளில் கடைகளை அப்புறப்படுத்தப்பட்டு விட்டதை கண்டித்து நேற்று வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் இன்று காலை தஞ்சைக்கு வந்தார். பின்னர் அவர் பழைய பஸ் நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வேலியை பார்வையிட்டார்.

    இதையடுத்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தஞ்சை பழைய பஸ் நிலையத்தை மூடிவிட்டு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை வணிகர்கள் வரவேற்கிறார்கள். ஆனால் எடுத்தோம்.. கவிழ்த்தோம் என்று பழைய பஸ் நிலையத்தை மூடிவிட்டு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. பழைய பஸ் நிலையத்தை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    மேலும் நேற்று இரவே மின் இணைப்பை துண்டிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. வணிகர்கள், வியாபாரிகள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம் என கூறியதன் பேரில் மின் இணைப்பு துண்டிக்கும் செயலை கைவிட்டுள்ளனர்.

    தீபாவளி முடிந்த பிறகாவது தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டிருக்கலாம்.

    நாளைக்குள் இரும்பு வேலியை அகற்றாவிட்டால் பெரிய அளவில் ஒன்று திரண்டு போராட்டம் நடைபெறும். அதில் நானும் கலந்து கொள்வேன். தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் இங்கு ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு அதே இடத்தில் கடை கட்டிக் கொடுக்கப்படும் என எழுத்துப் பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும். அதுவரை வியாபாரிகளுக்கு மாற்று இடமாக திலகர் திடல் அல்லது கீழ அலங்கத்தில் கடை செட் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

    அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது சிறு வியாபாரிகளுக்கு எதிரானதாகவே உள்ளது. அதுபோல்தான் தஞ்சை பழைய பஸ் நிலையம் நடவடிக்கைகளும் எதிரொலித்துள்ளது. இது சம்பந்தமாக நான் உள்பட வணிகர் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். அவரும் நேரில் வந்து பார்ப்பதாக கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    முன்னதாக வெள்ளையன் தலைமையில் வணிகர்கள், வியாபாரிகள் பழைய பஸ் நிலையம் முன்பு நடுரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரும்புவேலி அகற்றகோரியும் , வியாபாரிகளுக்கு மாற்று இடம் உடனே வழங்க கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    வணிகர்களின் போராட்டத்தையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×