search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ஆணையம்
    X
    தேர்தல் ஆணையம்

    நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நவம்பர் மாதம் இடைத்தேர்தல்

    நாங்குனேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக  சட்டசபையில் நாங்குநேரி,  விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளும் பிரதிநிதித்துவம் இல்லாமல் காலி இடங்களாக உள்ளன.

    பாராளுமன்ற தேர்தலின் போது நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச். வசந்தகுமார், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் நாங்குனேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளும் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த இரு தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து அந்த 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தமிழக தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இடைத்தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டியதுள்ளது. மகாராஷ்டிரா, அரியானா ஆகிய இரு மாநிலங்களின் சட்டசபை பதவிக் காலம் நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் முடிகிறது. ஜார்க்கண்ட் மாநில சட்டசபை பதவிக் காலம் டிசம்பரில் நிறைவு பெறுகிறது. எனவே இந்த மூன்று மாநிலங்களிலும் நவம்பர் 2வது வாரத்துக்குள் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

    தற்போது இந்த மூன்று மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டுச் சாவடி ஏற்பாடு மற்றும் ஓட்டுச்சாவடி ஊழியர்களுக்கு பயிற்சி ஆகிய ஏற்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன.

    இடைத்தேர்தல்


    நவம்பர் முதல் வாரத்தில் ஓட்டுப்பதிவு நடத்தும் வகையில் 3 மாநில தேர்தலும் நடத்தப்படும். அப்போது அந்த தேர்தலுடன் நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எனவே நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கும் நவம்பரில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான தேர்தல் தேதி அட்டவணை 3 மாநில தேர்தலுடன் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×