search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்தில் கருகி கிடக்கும் பொருட்கள்.
    X
    தீ விபத்தில் கருகி கிடக்கும் பொருட்கள்.

    சுசீந்திரத்தில் கல்லூரி பேராசிரியை வீட்டில் திடீர் தீ விபத்து

    சுசீந்திரத்தில் கல்லூரி பேராசிரியை வீட்டில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மின் சாதனங்கள் எரிந்து நாசமானது.

    என்.ஜி.ஒ.காலனி:

    சுசீந்திரம், சன்னதி தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 64). ஓய்வு பெற்ற வங்கி முதுநிலை மேலாளர். மனோகரனின் மனைவி தமிழ் அருள் செல்வி (55). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களின் மகள் சுஷ்மா. எம்.பி.பி.எஸ். படித்துள்ள சுஷ்மா தற்போது மருத்துவ பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். இதற்காக வீட்டில் ஏராளமான புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார்.

    வீட்டின் மேல் மாடியில் மனோகரனும், அவரது மனைவியும் தனித்தனி அறையில் தூங்குவது வழக்கம். இவர்களின் மகள் சுஷ்மா இன்னொரு அறையில் தங்கி உள்ளார். இரவில் நீண்ட நேரம் படித்துவிட்டு தூங்க செல்வார்.

    நேற்றும் இரவு 12 மணி வரை படித்துவிட்டு சுஷ்மா தூங்க சென்றார். அப்போது வீட்டின் கீழ் தளத்தில் பலத்த வெடி சத்தம் கேட்டது.

    வெடி சத்தம் கேட்ட சிறிது நேரத்தில் வீட்டின் அனைத்து அறைகளில் இருந்தும் கரும்புகை வந்தது. அப்போது வீட்டில் இருந்த மின் சாதனங்கள் அனைத்தும் வெடித்து சிதறின.

    அதோடு சில மின் சாதனங்கள் தீ பிடித்து எரிந்தன. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வீட்டிற்குள் சிக்கி கொண்ட மனோகரன், அவரது மனைவி தமிழ் அருள் செல்வி, மகள் சுஷ்மா ஆகியோரை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

    மேலும் மனோகரன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி நாகர்கோவில் தீ அணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    மேலும் வீட்டிற்குள் சென்று எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றனர். அப்போது வீட்டில் இருந்த சில கண்ணாடி பொருள்கள் வெடித்து சிதறியது. இதில் தீயணைப்பு வீரர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    தீ விபத்தில் வீட்டில் இருந்த மின் சாதனங்கள் மட்டுமின்றி, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஹோம் தியேட்டர், மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்களும், சுஷ்மாவின் கல்லூரி பாட புத்தகங்களும் எரிந்து நாசமானது.

    இவற்றின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    மனோகரன் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா? என்று விசாரணை நடக்கிறது. இது பற்றி மனோகரன் கூறும்போது, வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் பெட்டியில் பழுது ஏற்பட்டது.

    இது தொடர்பாக மின் வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்து சென்றனர். அதன்பிறகே மின் சாதனங்கள் வெடித்து சிதறியது. இதன்காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக்கருதுகிறேன் என்றார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    Next Story
    ×