search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    போலீஸ் அதிகாரிகள் அலட்சியம் - டி.ஜி.பி., போலீஸ் கமி‌ஷனர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

    வழக்குகளில் ஆஜராகாத போலீஸ் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, வழக்குகளின் விசாரணைகளை வருகிற 13-ந்தேதிக்கு தள்ளிவைத்து, தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
    சென்னை:

    சில வழக்குகளில் போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பலமுறை ஐகோர்ட்டு உத்தரவிட்டாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராவது இல்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு நீதித்துறை மத்தியில் பல ஆண்டுகளாக நிலவி வருகின்றன.

    இதனால், சில நேரங்களில் ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி முடிவுகளை எடுப்பது உண்டு. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிடிவாரண்டு பிறப்பிப்பது அல்லது அவருக்கு உயர் அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிடுவது போன்ற நடவடிக்கைகளை நீதிபதிகள் எடுப்பார்கள்.

    ஒட்டுமொத்த காவல்துறையே அலட்சியமாக செயல்படவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், திருவண்ணாமலை, திருவாரூர், கடலூர், வேலூர் ஆகிய மாவட்ட போலீசார் தான் அலட்சியமாக செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் ஐகோர்ட்டு வளாகத்தில் சுமத்தப்படுகிறது.

    இவர்கள் எல்லாம் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஆனால், அலட்சியமாக செயல்படுவதில் சென்னை மாநகர போலீசார் முதலிடம் என்கின்றனர். ஐகோர்ட்டுக்கு மிக அருகில் உள்ள யானைகவுனி போலீஸ் அதிகாரியிடம் ஒரு வழக்கில் விளக்கம் கேட்க, அது சம்பந்தமாக ஐகோர்ட்டு தனி உத்தரவையே பிறப்பித்த சம்பவங்கள் எல்லாம் நடைபெற்றுள்ளன.

    இதனால், வழக்கு விசாரணையின்போது, போலீஸ் தரப்பு விளக்கத்தை நீதிபதிகள் கேட்கும்போது அரசு தரப்பில் ஆஜராகும் குற்றவியல் வக்கீல் பதில் தெரியாமலும், விளக்கம் அளிக்க முடியாமலும் ‘திருதிருவென’ விழிப்பதும், என்ன செய்வது என்று தெரியாமலும் ஒரு சங்கோ‌ஷ நிலையில் நெளிவதை காண முடியும்.

    இன்ஸ்பெக்டர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று துணை கமி‌ஷனர், இணை கமி‌ஷனர் போன்ற உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்யவேண்டும். அப்போது தான் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் ஓடி வருவார்கள்.

    அதுவும் சில நேரம் போலீஸ்காரர்களிடம், குறிப்பாக பெண் போலீசாரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை கொடுத்து அனுப்புவார்கள். அப்படி ஐகோர்ட்டுக்கு வரும் போலீசாருக்கு, வழக்கு தொடர்பாக எதுவும் தெரியாது. அந்த வழக்கு ஆவணங்களையும் அவர்கள் படித்து பார்த்திருக்க மாட்டார்கள். இதனால், சிலர் தவறான தகவல்களை ஐகோர்ட்டுக்கு தெரிவிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்படும்.

    இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு போலீஸ் தொடர்பான வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல வழக்குகளில் போலீஸ் தரப்பில் இருந்து பதில் வரவில்லை என்று தெரிய வந்தது.

    போலீசாரின் இந்த அலட்சிய போக்கிற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி பி.வேல்முருகன், ‘அந்த வழக்குகளின் விசாரணைகளை எல்லாம் வருகிற 13-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். அன்று தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

    Next Story
    ×