search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் ராதாகிருஷ்ணன்
    X
    டாக்டர் ராதாகிருஷ்ணன்

    ஆசிரியர் என்னும் சமூக வழிகாட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன்

    ஆசிரியராக தன் பணியை தொடங்கி நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளே இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
    இன்று (செப்டம்பர் 5-ந்தேதி) ஆசிரியர்தினம்.

    ஆசிரியராக தன் பணியை தொடங்கி நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளே இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இவங்கதான் என்னுடைய ‘ஒண்ணான் கிளாஸ்’ டீச்சர் இப்படி அறிமுகப்படுத்துகிற யாரையும் ஒரு கணம் மனக்கண்ணால் பாருங்கள். அவரது முகம் பெருமையில், மகிழ்ச்சியில் மலர்ந்து இருக்கும்.

    எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும், ‘ஒண்ணான் கிளாஸ்’ டீச்சருக்கு கிடைக்கும் மரியாதையே தனி. ஏன் அப்படி...? நம் கையைப் பிடித்து, ‘அ’, ‘ஆ’, ‘இ’, ‘ஈ’... எழுத வைத்தவர்... எழுத்து, கல்வி, அறிவு... நமக்கு ஊட்டியவர் அவர்தானே...?

    ஒவ்வொரு மனிதனுக்கும், இன்பத்தை அள்ளி வழங்கிய பிஞ்சுப் பருவத்தில், வீட்டுக்கு வெளியே உள்ள உலகத்தை அறிமுகப்படுத்தியது தொடக்கக் கல்விப் பருவம். அப்போது நம்மோடு கைகோர்த்துப் பயணித்தவர்- தொடக்கக் கல்வி ஆசிரியர். அவரை எப்படி மறந்து போகும்...

    தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பு.. என்று, படிப்படியாய் கல்வியறிவில் உயர உயர, ஆசிரியர்களின் மீதான நமது எல்லையற்ற அன்பும் படிப்படியாய்க் குறைந்து விடுகிறது. உண்மையில் வாழ்க்கையின் முதல் சோக அத்தியாயம் அப்போதுதான் எழுதப்படுகிறது.

    ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் இருந்து சிறிது சிறிதாக விடுபட்டு, சுயமாக சொந்தமாக சிந்தித்து செயல்பட ஆரம்பிக்கிற காலம்தான் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளத் தயார் ஆகிற காலம். இந்தச் சமயத்தில்தான், நல்ல வழி காட்டுகிற ஆசிரியர்களுக்கான தேவை மிகவும் அதிகம். துரதிர்ஷ்டவசமாக, அப்போதுதான் நாம் ஆசிரியர்களிடம் இருந்து முற்றிலுமாக விலகத் தொடங்குகிறோம்.

    இந்த முரண், வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் தொடர்கிறது. பள்ளிப்படிப்பை முடித்த பின்னும், கல்லூரிக் கல்வியை நிறைவு செய்த பிறகும், தன் சிறு வயது ஆசிரியர்களை நினைவில் வைத்துப் போற்றுகிற ஒவ்வொரு மனிதனும் சிறந்த குடிமகனாக நற்பண்புகள் உடையவனாகவே இருக்கிறான். நல்ல நெறிமுறைகளில் இருந்து அவன் எப்போதும் விலகிச் செல்வதே இல்லை. ஆசிரியரின் தாக்கம் அத்தனை வல்லமை கொண்டது. தாய், தந்தை உறவுக்கு அடுத்ததாக உயரிய இடத்தில் மதிக்கப்படுகிறது ஆசிரியர் மாணவர் பிணைப்பு. இந்த சமன்பாடு சமீப காலமாக மங்கி வருவதைக் காண முடிகிறது. நமது சமுதாயம் சந்திக்கிற மிகப்பெரிய சரிவு இது.

    ‘டிஜிட்டல்’ வகுப்புகள், இணைய வழிக் கல்வி, தொழில் நுட்பம் மிகுந்த பள்ளி வளாகங்கள்...இவற்றுக்குள், ஒரு மிகப் பெரிய ஆபத்து ஒளிந்து கிடப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறதா...? நவீனக் கல்வி முறையால், போற்றுதலுக்கு உரிய ஆசிரியர் மாணவர் உறவு, முற்றிலுமாக மறைந்து போய் விடும்.

    ‘இந்தா...காசு; கொடு கல்வியை’ என்று பேரம் பேசி வாங்குகிற கடைச்சரக்காகக் கல்வியை மாற்றி அமைத்து விட்டால், சமூகத்தில் உயரிய நெறிமுறைகளை யாரிடம் இருந்து பெறுவது...? எதுவானாலும் கணினியைக் கேட்டு, பார்த்துத் தெரிந்து கொள்’ என்று அனைத்தையும் இயந்திரங்களின் வசம் விட்டுவிட்டால், மனித உறவுகளின் அவசியத்தை யார்தான் உணர்த்துவது...?

    ஆசிரியர் பணிக்கான தேர்வு முறையே வேதனை தருவதாக உள்ளது. ‘தகுதித் தேர்வு’ ‘தரமான பயிற்சி’ ஆகியன எல்லாம் தாண்டி, ஆசிரியருக்கு என்று சில பிரத்யேக குணநலன்கள் உண்டு. ‘ஊரார் பிள்ளை‘யைத் தம் பிள்ளையாகக் கருதி அக்கறையுடன் வழிகாட்டுகிற, தன்னலமற்ற சேவை மனப்பான்மை ஆசிரியப் பணியின் அடிநாதம்; ஆதார சுருதி; அடிப்படைத் தகுதி. ஆசிரியர் தேர்வில் இந்த அம்சம் சற்றேனும் கவனத்தில் கொள்ளப்படுகிறதா...?

    ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பின்போது, காவலர் பணிக்கான தேர்வின்போது, எழுத்துத் தேர்வு, கல்வித் தகுதி ஆகியன தாண்டி, உடற்தகுதி, ஆரோக்கியம், மன வலிமை, நன்னடத்தை ஆகியனவும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

    இதே போன்று, ஆசிரியர் தேர்வின் போதும், சமூக அக்கறை, பொது நலனில் ஈடுபாடு, சேவை மனப்பான்மை உள்ளிட்ட சிறப்பு குணநலன்கள் இருக்கின்றனவா என்று சோதித்துப் பார்த்து தேர்வு செய்தல் நல்லது. எழுத்துத் தேர்வுக்குப் பிறகு, இந்த முறையை அறிமுகப்படுத்தலாம். இந்தக் கூடுதல் தேர்வு முறை ஒன்றும், இயலாத காரியமோ, அதிக நிதிச்சுமை கொண்டதோ இல்லை. ஆனால், ‘வேண்டாதவர்களை’ ஒதுக்குவதற்கான சாதனமாக இதனைச் சிலர் பயன்படுத்துகிற ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. இதனைச் சரி செய்ய, நேர்மையான, நடுநிலையான, அரசியல் சார்பற்ற பெரியவர்களைக் கொண்டு, தன்னதிகாரம் கொண்ட தேர்வுக் குழுவை மாவட்டம் தோறும் அமைக்கலாம்.

    காமராஜர்

    தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் ஏராளமாகத் தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டது மட்டுமல்ல; தூய்மையான நல்லெண்ணம் கொண்ட மனிதர்கள் ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். அவருக்குப் பிறகு ஏற்பட்ட உடனடி மாற்றமே, ஆசிரியர் பணித் தேர்வில் புகுந்து விட்ட ஊழலும் அரசியலும்தான். இந்த நிலை இனியும் தொடரலாகாது. காரணம், ஆசிரியர் எவ்வழி நாம் அனைவரும் அவ்வழி. நம் குழந்தைகளை நல்வழிப் படுத்தி, அவர்களிடம் நன்னெறிகளை வளர்ப்பதற்கு நல்லாசிரியர்கள் வேண்டும் என்று நாம் கேட்டுப் பெற வேண்டும். இலவசக் கட்டாயக் கல்வி மட்டுமல்ல; நல்ல தரமான கல்வி பெறவும், அதற்கு வழி கோலுகிற நல்ல ஆசிரியர்களைப் பெறவும் கூட, நமக்கு உரிமையும் பொறுப்பும் இருக்கிறது. நல்லாசிரியர்களால் உயரட்டும் நம் நாடும் நம் மக்களும்!

    - பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, வருமானவரித்துறை அதிகாரி
    Next Story
    ×