search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடையம் தம்பதி வீட்டில் கெள்ளை முயற்சி சம்பவம் நடந்தபோது எடுத்தபடம்
    X
    கடையம் தம்பதி வீட்டில் கெள்ளை முயற்சி சம்பவம் நடந்தபோது எடுத்தபடம்

    கடையம் தம்பதி வீட்டில் கொள்ளையர்கள் புகுந்த வழக்கில் முக்கிய துப்பு சிக்கியது

    கடையம் தம்பதி வீட்டில் கொள்ளையர்கள் புகுந்த வழக்கில் சில முக்கிய தடயங்களை கைப்பற்றியுள்ள தனிப்படையினர் அதனை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
    கடையம்:

    நெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தை சேர்ந்த தம்பதி சண்முகவேல்-செந்தாமரை. இவர்களது வீட்டில் கடந்தமாதம் 11-ந்தேதி முகமூடி அணிந்து அரிவாளுடன் புகுந்த 2 கொள்ளையர்களை வயதான தம்பதி இருவரும் விரட்டியடித்தனர். அவர்களது துணிச்சலான செயலை பாராட்டி சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் வீரதீர செயலுக்கான சிறப்பு விருதை முதல்-அமைச்சர் வழங்கி பாராட்டினார்.

    இந்நிலையில் தம்பதி வீட்டில் கெள்ளை முயற்சி சம்பவம் நடந்து 25 நாட்களாகி விட்ட நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த வழக்கில் துப்புதுலக்க 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியும் போலீசாரால் துப்பு துலக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    கடந்த 15 ஆண்டுகளில் நடந்த குற்ற வழக்குகள் கொண்ட பட்டியலை சேகரித்து அவற்றின் அடிப்படையில் கிராமம் கிராமமாக தனிப்படையினர் தீவிர விசாரணையில் களமிறங்கினர். எத்தனையோ குற்றங்களில் துப்பு துலக்குவதில் பெயர்போன திறமையான அதிகாரிகள் இந்த தனிப்படைகளில் இருந்தும் இவ்வழக்கு அவர்களுக்கு சவாலாகவே அமைந்துள்ளது.

    இந்த வழக்கு வெளியே தெரிவதற்கு முக்கிய காரணியாக இருந்தது சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள். அதுவும் 14 கேமராக்கள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் ஒன்று மட்டுமே வேலை செய்ததாக தெரிவிக்கப்பட்ட காரணம் தனிப்படையினருக்கு நெருடலை ஏற்படுத்தியது.

    எனவே சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை சேமிக்கும் கம்ப்யூட்டர் ஹார்ட்டிஸ்க்கை தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஒப்படைத்து ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் இதர பதிவுகளை கைப்பற்ற தனிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது.

    மேலும் இந்த வழக்கில் சில முக்கிய தடயங்களையும் தனிப்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும், அதனை பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கொள்ளை முயற்சி சம்பவத்தின் ஆணிவேரான சி.சி.டி.வி. பதிவுகளும் வீடியோ எடிட்டிங் வல்லுநர்கள் அடங்கிய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதுபோக சந்தேக வட்டத்திற்குள் வலுவான சில ஆதாரங்களைக் கொண்டு சிலரை பிடித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் சந்தேக வட்டத்திற்குள் சிக்கிய நபர்களை கொண்டு அடையாள அணிவகுப்பு நடத்தப்படலாம் எனவும், இந்த வழக்கின் விசாரணையை முழுமை செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த வழக்கு உள்ளூர் போலீசாரை தவிர்த்து தனிப்படைகளை மட்டுமே முழுமையாக நம்பி தற்போது சுழன்று வருகிறது. தனிப்படைகளுக்கு புதிதாக தலைமையேற்றுள்ள அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி புதிய வியூகத்திலும் இந்த விசாரணையை அணுக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    வீடியோ பதிவுகள் முழுமையாக மீளப்பெற்றாலோ, தடய அறிவியல் துறையில் இருந்து குற்றவாளிகள் பற்றிய தடயங்கள் தெளிவாக கிடைக்கப்பெற்றாலோ விரைவில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து விடலாம் என தனிப்படை போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×