search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஆர்ஓ ராஜேந்திரன்
    X
    டிஆர்ஓ ராஜேந்திரன்

    பெரம்பலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையம் திறப்பு

    பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை மையத்தை டி.ஆர்.ஓ. ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை மையத்தை டி.ஆர்.ஓ. ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

    வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களை சரிபார்த்துக் கொள்ள ஏதுவாக ஆர்டிஓ அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை மையத்தை டி.ஆர்.ஓ. ராஜேந்திரன் தொடங்கி வைத்து பேசுகையில்,

    இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2020ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ள அறிவித்துள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கத்துடனும் மற்றும் தகுதியுள்ள நபர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நோக்கத்துடனும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தை செப்டம்பர்1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுத்த உள்ளது.

    மேலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்காளர்களே மேற்கொள்ளும் புதிய திட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலமாக, வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி, புகைப்படம், பிறந்ததேதி ஆகிய விவரங்களை வாக்காளர்களே திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

    அதன்படி வாக்காளர் உதவி மையம் 1950 (மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள்), கைபேசி செயலி, தேசியவாக்காளர் இணையதள சேவை, பொது சேவை மையம் ஆகியவற்றில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வாக்காளர் பதிவு அலுவலரிடம்தங்கள் விபரங்களை சரி பார்த்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி வாக்காளர்கள் தங்கள் விபரங்களை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

    மேலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளம் அல்லது செயலியில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.

    இவ்வகையான திருத்தங்களுக்கு ஆதாரமாக கடவுச் சீட்டு, வாகன ஓட்டுநர் உரிமம், ஆதார், ரே‌ஷன் அட்டை, நிரந்தர கணக்கு எண், வங்கிக் கணக்கு புத்தகம், விவசாய அடையாள அட்டை மற்றும் சமீபத்தில் பெறப்பட்ட குடிநீர் இணைப்பு ரசீது, மின்கட்டண ரசீது, எரிவாயு இணைப்பு ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை பதிவேற்றலாம்.

    இணையம் அல்லது செயலியில் செய்யப்படும்திருத்தங்கள் தொடர்பாக வாக்குச் சாவடி நிலையிலான அலுவலர்கள் நேரில் கள ஆய்வு செய்து திருத்தங்களை உறுதிப்படுத்துவர்.

    அதன்பின்பு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்படும். இந்தத் திட்டம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். வாக்காளர் தங்கள் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

    மேலும் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களை சரி பார்த்துக் கொள்ள ஏதுவாக வாக்காளர் பதிவு அலுவலர் / ஆர்டிஓ அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மையம் மூலமாகவும் பயன்பெறலாம்.

    மேலும் வாக்காளர் வரைவுப் பட்டியலானது வரும் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும். இந்தப்பட்டியலில் உள்ள திருத்தங்கள், ஆட்சேபனை களை நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாக்காளர் தெரிவிக்கலாம். அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் திருத்தம் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் 2, 3 மற்றும் 9, 11 ஆகிய நான்கு தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்கள் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் நடை பெறவுள்ளது. முழுமையாக திருத்தம் செய்யப்பட்டவாக்காளர் பட்டியலானது வரும் ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் ஆர்டிஓ சுப்பையா, தாசில்தார் பாரதி வளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×