search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    நீர் பிடிப்பு பகுதியில் தொடர்மழை - முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை தாமதமாக பெய்ததால் ஒரு போக நெல் சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டும் முதல் போக சாகுபடிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பே தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர் மட்டமும் உயராமலேயே உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று 1472 கன அடி நீர் வந்தது. இன்று காலை நீர் வரத்து 1848 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டமும் 128.15 அடியாக உயர்ந்துள்ளது.

    பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் அணையின் நீர் மட்டம் 54.04 அடியாக உள்ளது. அணைக்கு 1058 கன அடி நீர் வருகிறது.

    பாசனம் மற்றும் குடிநீருக்காக 960 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 35.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 10 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 85.44 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று காலையும் சாரல் மழை தொடர்ந்து வருகிறது. கொடைக்கானலில் காலை முதல் பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். குளிர் காற்றுடன் தொடர்ந்து மழை பெய்ததால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    பெரியாறு 26.4, தேக்கடி 15, கூடலூர் 2.1, சண்முகா நதி அணை 1, உத்தமபாளையம் 1.2, கொடைக்கானல் 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×