search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை
    X
    சாலை

    மெஞ்ஞானபுரத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் பஜார் சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    மெஞ்ஞானபுரத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் பஜார் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலைய பணிக்கு திருச்செந்தூர் தாலுகா மெஞ்ஞானபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார குளங்களில் இருந்து மணல்-கற்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

    மெஞ்ஞானபுரம் வழியாக கனரக வாகனங்கள் சென்று வருவதால் முழுவதும் உருக்குலைந்து மணல் சாலையாக காட்சியளிக்கிறது. கனரக வாகனங்கள் செல்லும்போது காற்றில் தூசி கலந்து அப்பகுதியிலுள்ள மக்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டு ஆஸ்துமா, அலர்ஜி நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி வியாபாரிகள், அரசியல் கட்சியினர் பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்து வருகின்றனர்.

    மெஞ்ஞானபுரம் பகுதியில் தற்போது கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் லாரிகளில் வரும் தண்ணீரை குடம் ரூ.10-க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். பஞ்சாயத்து சார்பில் குடிநீர் வழங்கி வந்த பிரதான குழாய் மெஞ்ஞானபுரம் பால்பண்ணை அருகே மெயின் ரோட்டில் உடைந்து மாதகணக்கில் தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியதில் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் இந்தவழியாக மோட்டார் சைக்கிளில் செல்லும் முதியவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன் இவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் பள்ளத்தில் தவறி கீழே விழுந்து காயமடைந்தார். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்தவரை மீட்டனர். இந்த சாலை வழியாக மாவட்ட கலெக்டர், திருச்செந்தூர் கோட்டாட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் சென்று வருகின்றனர். இதுவரை யாரும் கண்டுகொள்ளாதது வேதனைக்குரியது. அதிகாரிகள் பாராமுகம் காட்டுவதனால் இந்த பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பழுதடைந்த சாலையை சீரமைத்து இந்த பகுதி மக்களை ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோயிலிருந்து காப்பாற்றக் கோரி கடந்த மாதம் 11 -ந் தேதி ஆர்பாட்டம் நடத்த போவதாக இந்து மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர். ஆனால் திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் 9-ந் தேதி நடைபெற்ற சமாதான கூட்டத்தில் 30 நாட்களுக்குள் பஜார் பகுதியில் இருந்து போலீஸ் நிலையம் வரை 300 மீட்டர் தூரம் வரை சாலையை சரி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்து கையொப்பமிட்டு கொடுத்திருந்தனர்.

    இதனால் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர். ஆனால் உறுதிமொழி கொடுத்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் சாலையை சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரிகள் உடைந்து வீணாகும் குடிநீர் குழாயை சரிசெய்து, பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×