search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள்
    X
    மீனவர்கள்

    வேலை நிறுத்தம் வாபஸ் - 8 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

    வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததையொட்டி ராமேசுவரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்குவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரவை மீன்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 24-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் மீன்பிடி உபதொழிலை சார்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். ரூ.3 கோடி அளவில் மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

    மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

    அப்போது அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மறியல் கைவிடப்பட்டு மீனவர்கள் பேரணியாக சென்று கோரிக்கையை வலியுறுத்தினர்.

    இதனிடையே மீனவ சங்க பிரதிநிதிகளுடன், அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மீனவர்களின் கோரிக்கைகள் அரசிடம் தெரிவித்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற மீனவர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி 8 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், 800 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    இதனால் ராமேசுவரம் துறைமுகம் மீண்டும் பரபரப்பாக செயல்பட தொடங்கியது.

    Next Story
    ×