search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டு
    X
    சென்னை ஐகோர்ட்டு

    ஜெயலலிதாவின் சொத்தில் ஒரு பங்கை மக்களுக்கு கொடுத்தால் என்ன? தீபா, தீபக்கிடம், ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

    ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று கூறிய ஜெயலலிதாவின் சொத்துகளில் ஒரு பகுதியை மக்களுக்காக கொடுத்தால் என்ன?’ என்று தீபா, தீபக் ஆகியோரிடம் ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ரூ.913 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துகளை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.கே.நகர் புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் வாரிசுகளான அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா, தீபக் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.

    அவர்களிடம் நீதிபதிகள், ‘ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்து 3-வது நபர் வழக்கு தொடரும் வரை நீங்கள் ஏன் நீதிமன்றத்தை நாடவில்லை?’ என்று கேட்டனர்.

    அதற்கு தீபக், ‘வாரிசு சான்றிதழ் கேட்டு தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன். அவர் 3 மாதங்களுக்கு பின்னர், 2-ம் நிலை வாரிசுதாரர்கள் என்பதால், நீதிமன்றத்தை தான் நாடவேண்டும் என்று கூறினார். அதனால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அது நிலுவையில் உள்ளது’ என்றார்.

    ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று ஜெயலலிதா கூறினார். அவரது சொத்துகளில் ஒரு பகுதியை மக்களுக்கு கொடுத்தால் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தீபா, ‘எங்களுடைய அத்தை ஜெயலலிதாவுக்கும் அதே எண்ணம் இருந்தது. அதனால், சொத்துகளை எல்லாம் நிர்வாகத்துக்குள் கொண்டு வந்து, எங்கள் அத்தை ஜெயலலிதாவின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய திட்டமிட்டுள்ளோம்’ என்று கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட தீபக், ‘என் அத்தைக்கு இறுதிச் சடங்கை நான் தான் செய்தேன். 2 வாரம் போயஸ் கார்டனில் தங்கி, பூஜைகள் எல்லாம் செய்தேன். அதன்பின்னர், அந்த வீட்டிற்குள் போக முடியவில்லை. தி.நகரில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டேன். பின்னர் போயஸ் கார்டன் வீட்டை பூட்டி விட்டதால், இதுவரை அங்கு செல்ல முடியவில்லை’ என்றார்.

    இதைதொடர்ந்து தீபா, ‘போயஸ் கார்டனில் தான் நாங்கள் பிறந்தோம். 1991-ம் ஆண்டுக்கு பின்னர் அந்த வீட்டுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. அந்த வீட்டில் தான் பாட்டி, அப்பா, அம்மா மற்றும் அத்தையுடன் நாங்கள் வாழ்ந்தோம். ஆனால், எங்களது தரப்புக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்காமல், அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளனர். எங்களை போயஸ் கார்டன் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும். அந்த வீட்டின் சாவியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், ‘ஜெயலலிதாவின் வாரிசுகள், அவரது அண்ணன் பிள்ளைகள் தான் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்காமல் எப்படி போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லாமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது? எனவே, வாரிசுதாரர்களான இவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும்’ என்று கருத்து தெரிவித்தனர்.

    அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் டி.எம்.பாப்பையா, ‘தீபா, தீபக் ஆகியோருக்கு போயஸ் கார்டன் வீடு தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்படும்’ என்றார்.

    தீபக், தீபா


    உடனே மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் என்.எஸ்.நந்தகுமார், ‘ஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துக்கள் உள்ளன? எவ்வளவு பங்கு பத்திரங்கள் உள்ளன? என்ற விவரம் சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிலும், தேர்தலில் போட்டியிடும்போது ஜெயலலிதா தாக்கல் செய்த வேட்பு மனுவிலும் உள்ளது.

    அந்த சொத்துகளை எல்லாம் தீபாவும், தீபக்கும் கேட்கவில்லை. குறிப்பிட்ட சொத்துகளை தான் கேட்கின்றனர். இதனால் தான் அனைத்து சொத்துகளையும் நிர்வகிக்க சொத்தாட்சியரை நியமிக்க வேண்டும் என்கிறோம்.

    அப்படி நியமிக்கும்போது, அந்த அதிகாரியிடம் வாரிசுதாரர்கள், வாரிசு சான்றிதழ்களை கொடுத்து தங்களுக்கு சேர வேண்டிய சொத்துகளை பெற்று கொள்லாம்.

    நமது எம்.ஜி.ஆர்., சசி எண்டர்பிரைசஸ், ஜெயா பப்ளிக்கேஷன் நிறுவனங்களுக்கு மட்டுமே 58 சொத்துகள் உள்ளன. இதுபோக ஏராளமான சொத்துகள் உள்ளன’ என்று வாதிட்டார்.

    இதற்கு தீபக் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.எல்.சுதர்சனம் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். அப்போது, தமிழ்நாடு அரசு சொத்தாட்சியர் சார்பில் ஆஜரான வக்கீல் எம்.பாஸ்கர், ‘இப்போது போயஸ் கார்டன் வீட்டை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக அரசு அறிவித்துள்ளது. ஒருவேளை தமிழகத்தில் நாளை ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.

    அப்போது, நினைவு இல்லமாக இருக்கும் போயஸ் கார்டன் வீட்டை வேறு பயன்பாட்டுக்காக மாற்றப்படலாம். இதுதொடர்பாக புதிய அரசாணைகள் எல்லாம் பிறப்பிக்கப்படலாம். எனவே, ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்காததால், அவர் பெயரில் உள்ள அனைத்து சொத்துகளையும் சொத்தாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் பொதுநலனுடன் இந்த சொத்துகளை எல்லாம் பராமரிப்பார்’ என்று வாதிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
    Next Story
    ×