search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு
    X
    பட்டாசு

    தீபாவளி பண்டிகை: சிவகாசி பட்டாசுக்கு குவியும் ஆர்டர்கள்

    தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சிவகாசி பட்டாசுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. எதிர்பார்த்ததை விட ஆர்டர் அதிகம் வந்துள்ளதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    தாயில்பட்டி:

    பட்டாசு என்றாலே நம் நினைவுக்கு வருவது சிவகாசி தான். இங்கு தயாராகும் பட்டாசுகளால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே பட்டாசு வெடிப்பிற்கு வரைமுறைகளை ஏற்படுத்த வேண்டும், சுற்றுப்புற சூழலை பாதிக்காத வகையில் உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபாவளியன்று குறிப்பிட்ட 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. இதனால் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் கடந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. வெளி மாநிலங்களிலும் பட்டாசுகளை விரும்பி வாங்காததால் பெருமளவில் தேக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் பசுமை பட்டாசு தயாரிப்பு குறித்து நிபுணர்கள், பட்டாசு உற்பத்தியாளர்களுடன் கலந்தாலோசித்து வருகின்றனர். மேலும் பட்டாசு தயாரிப்பில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழகத்துடன் (நீரி) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    சிவகாசியில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பட்டாசு ஆய்வகத்தில் வேதியியல் பொருட்களின் தன்மை, வெடியின் ஒலி-ஒளி அளவு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. பசுமை பட்டாசு உத்தரவு காரணமாக தேக்கமடைந்த பட்டாசுகள் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் வெளி மாநிலங்களில் நடைபெற்ற பண்டிகைகளுக்காக பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது. பட்டாசு கள் முழுமையாக விற்றுத் தீர்ந்தன.

    இதனால் உற்சாக மடைந்த சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் தீபாவ ளிக்காக தற்போது முழு வீச்சில் பட்டாசுகளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளனர். மேலும் குஜராத், மத்தியபிரதேசம், கர்நாடகா, உத்தரகாண்ட், பீகார், அசாம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பட்டாசு ஆர்டர்கள் குவிந்துள்ளன. எதிர்பார்த்ததை விட ஆர்டர் அதிகம் வந்துள்ளதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    பட்டாசு கடைகளும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 1300 பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன. பட்டாசு தயாரிப்பு மற்றும் ஆர்டர்கள் குறித்து தமிழக பட்டாசு வணிகர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இளங்கோவன் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் தற்போது 1300 கடைகள் மூலம் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. பட்டாசு விற்பனை செய்ய 5 ஆண்டுக்கு உரிமம் வழங்க வேண்டும்.

    பட்டாசு விற்பனை செய்யும் கடைகளில் தீயணைக்கும் கருவி, மின் அணைப்பான்கள் வைத்திருக்க வேண்டும். அனைத்து பட்டாசு கடைக்காரர்களும் முறையான அனுமதி பெற்றுத்தான் விற்பனை செய்கிறார்கள்.

    பட்டாசு கடைகளில் பட்டாசுகளை தவிர மூலப் பொருட்கள், கெமிக்கல் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. பாதுகாப்பு சாதனங்கள், கருவிகளை கடையில் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.

    பட்டாசுகளை கொண்டு வரும் வாகனங்களை கடை வரை அனுமதிக்கக்கூடாது. கடைக்கு சற்று தூரத்திலேயே நிறுத்திவிட்டு பட்டாசுகளை பாதுகாப்பாக கடைக்குள் இறக்கி வைக்க வேண்டும்.

    மழை காலமாக இருப்பதால் இடி, மின்னலால் வெடி பொருட்கள் பாதிக்கப்பட்டாமல் இருக்க பாதுகாக்க குடோன்களில் இடி தாங்கி அமைக்க வேண்டும்.

    பட்டாசு கடைகளுக்கு வெளியே கிப்ட் பாக்ஸ் தயாரிக்கக் கூடாது. வெடிகளை அட்டைப்பெட்டிகளில் சேகரிக்கும் பணிகளையும் செய்யக்கூடாது.

    கிப்ட் பாக்ஸ்களில் மத்தாப்பு பெட்டிகள், ரோல் கேப் வெடிகளை கண்டிப்பாக வைக்கக்கூடாது. ஏனெனில் பட்டாசுகள் குளோரேட் மூலம் தயாரிக்கப்படுவதால் சிறு உராய்வு ஏற்பட்டாலும் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இவற்றை கிப்ட் பாக்ஸ்களில் வைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    பட்டாசு கடைகளுக்குள் அளவுக்கு அதிகமாக வாடிக்கையாளர்களை அனுமதிக்கக்கூடாது. அவர்கள் அங்குள்ள பட்டாசுகளை எடுக்கும்போது தவறி விழுந்து அதன் மூலம் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.

    Next Story
    ×