search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டு
    X
    சென்னை ஐகோர்ட்டு

    போலீஸ் பாதுகாப்புடன் திருமுல்லைவாயல் கோவில் நிலத்தை அளவிட வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

    திருமுல்லைவாயல் அம்மன் கோவில் நிலத்தை போலீஸ் பாதுகாப்புடன் அளவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை திருமுல்லை வாயலில் உள்ள பிடாரி எட்டியம்மன் கோவிலின் செயல் அதிகாரியாக இருப்பவர் ஏ.குமரேசன். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    திருமுல்லைவாயல் கிராமத்தில் உள்ள இந்த அம்மன் கோவிலுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த சொத்துக்களை, கோவில் பூசாரி சரியாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    என்னை இந்த கோவிலின் செயல் அதிகாரியாக நியமித்து, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

    நான் சொத்துக்களை சரி பார்த்த போது, திருமுல்லை வாயல் கிராமத்தில் பல்வேறு சர்வே நம்பர்களில் 13.18 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்குரிய அடங்கல், சிட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கோவில் பெயரில் தான் இன்னமும் உள்ளது.

    தற்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலங்கள் திறந்த வெளி இடமாக இருப்பதால், கோவில் நிலத்துக்குரிய எல்லை எதுவரை உள்ளது? என்று பொதுமக்களுக்கு தெரியவில்லை.

    இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் நிலத்தை அளக்க வேண்டும் என்று ஆவடி நகர நிலவரித் திட்டம் தாசில்தாரிடம் விண்ணப்பம் செய்தேன். அதற்காக கட்டணத்தையும் செலுத்தி விட்டேன்.

    ஆனால் நிலத்தை அளக்க வில்லை. அதே ஆண்டு அக்டோபர் மாதமும் உரிய கட்டணத்தை செலுத்தி நிலத்தை அளவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் நாளுக்கு நாள் கோவில் நிலத்தை சட்டவிரோதமாக பலர் ஆக்கிரமித்து வருகின்றனர்.

    எனவே, கோவிலுக்கு சொந்தமான 13.18 ஏக்கர் நிலத்தை வரையறை செய்து, அதன் எல்லையை நிர்ணயம் செய்து தரும்படி தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘கோவில் நிலத்தை அளவிட்டு, அதன் எல்லையை வரையறை செய்யும் பணியை ஆவடி தாசில்தார் மேற்கொள்ள வேண்டும்.

    இந்த நிலம் சரியாக அளவிடப்படுகிறதா? என்பதை சிறப்பு அரசு பிளீடர் கார்த்திகேயன் மேற்பார்வையிட வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள தகுந்த போலீஸ் பாதுகாப்பை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்க வேண்டும்’ என்று உத்தர விட்டார்.

    Next Story
    ×