search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நளினி
    X
    நளினி

    ராஜீவ் கொலை வழக்கு - 7 பேரை விடுவிக்க கோரிய நளினி மனு தள்ளுபடி

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் 7 பேரை விடுவிக்க கோரிய நளினியின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபட்பாயஸ், ஜெயக்குமார் உள்பட 7 பேர் கைதிகளாக உள்ளனர்.

    அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக கவர்னருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தமிழக கவர்னர் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதைத் தொடர்ந்து ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள தான் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுக்கு நளினி மனு அனுப்பினார்.

    சென்னை ஐகோர்ட்

    ஆனால் தமிழக அரசு தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதையடுத்து நளினி சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், “எங்கள் 7 பேரையும் உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார்.

    நளினியின் மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதை ஏற்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

    தமிழக அரசின் மனுவில், “ராஜீவ் கொலையாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக கவர்னரிடம் விளக்கம் கேட்க முடியாது. மேலும் தண்டனை பெற்ற கைதிகள் தங்களை விடுவிக்குமாறு உரிமையாக கோர முடியாது” என்று தெரிவித்திருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் சி.சரவணன் அமர்வில் கடந்த 20-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து கவர்னரிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டறிய வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் கூறுகையில், “இந்திய அரசியலமைப்பு சட்டம் 361-படி, தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மேல் நடவடிக்கை குறித்து கவர்னரிடம் விளக்கம் கேட்க முடியாது” என தெரிவித்தார்.

    இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர். இன்று (வியாழக்கிழமை) நளினியின் வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வெளியிட்டனர். தீர்ப்பு விவரம் வருமாறு:-

    நளினியின் கோரிக்கையை ஏற்க முடியாது. நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை நளினி உரிமையாக கோர முடியாது.

    இவரது மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. அதனால் தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×