search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
    X
    காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

    பெரியவாடியூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கிராம மக்கள் காலிகுடங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்தது. விருதுநகர் அருகே உள்ள பெரியவாடியூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும், கிராம மக்களும் காலிகுடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அர்ச்சுனாநதி ஆற்றுப்படுகையில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    விருதுநகர் அருகே உள்ள மூளிப்பட்டி, ராமசாமிபுரம், தவசிலிங்காபுரம், எம்.சங்கரலிங்காபுரம், மன்னார் நாயக்கன்பட்டி ஆகிய கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் கிராமங்களில் 1000 ஏக்கர் நிலப்பிரப்பில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் அமெரிக்க படைப்புழு தாக்குதலால் சேதம் அடைந்துவிட்ட நிலையில் நிவாரணம் கோரி மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    விருதுநகர் அருகே உள்ள சின்ன மூப்புபட்டி கிராமத்தை சேர்ந்த முத்தரையர் டி.என்.டி.உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் சீர்மரபினர் பட்டியலில் உள்ள வளையர் இன மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாகவும், அரசு ஆணைப்படி இவர்களுக்கு டி.என்.டி. சாதிசான்றிதழ் வழங்க உத்தரவிடுமாறு கோரி மனு கொடுத்தனர்.

    மம்சாபுரம் அருகே உள்ள இடையன்குளம் கண்மாய்க்கான நீர்வரத்து ஓடையை அப்பகுதியில் உள்ள கல்குவாரி நிர்வாகத்தினர் ஆக்கிரமித்துள்ளதால் கடந்த 5 வருடங்களாக கண்மாய்க்கு நீர் வரத்து இல்லை என்றும், இந்த ஆக்கிரமிப்பை அகற்ற சிவகாசி ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    Next Story
    ×