search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் நாராயணசாமி
    X
    முதல்வர் நாராயணசாமி

    புதுவை பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க 33 நாட்கள் ஆனது- நாராயணசாமி விளக்கம்

    புதுவை பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க 33 நாட்கள் ஆனது என்று சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் இன்று நடந்த விவாதம் வருமாறு:-

    அன்பழகன்: பட்ஜெட்டை ஆண்டுதோறும் காலத்தோடு சமர்ப்பிக்க வேண்டியது அரசின் கடமையாகும். இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் மார்ச் இறுதியில் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி ஆகஸ்ட் 31-ந்தேதி வரை 5 மாத செலவினங்களுக்கு மட்டும் சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் மூலம் அனுமதி பெறப்பட்டது. இந்த ஆண்டிற்கான பட்ஜெட் செலவினங்கள் ஜூலை மாதமே இறுதி செய்யப்பட்டது.

    புதுவையில் திட்டக்குழு கூட்டம் கூட்டப்பட்டு ஜூலை 13-ந்தேதி சுமார் ரூ.8 ஆயிரத்து 425 கோடிக்கு பட்ஜெட் தொகை இறுதி செய்யப்பட்டது. செப்டம்பர் 1-ந்தேதியிலிருந்து அரசின் செலவினங்களுக்கு சட்டமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என தெரிந்திருந்தும் அரசு நாளை பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது.

    பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு துறைரீதியாக விவாதம் நடத்தி, செலவினங்களுக்கு சட்டமன்றத்தின் அனுமதி பெறுவது சட்டரீதியான ஒன்றாகும். புதுவை அரசின் பட்ஜெட் காலதாமதத்தால் செப்டம்பர் 6-ந்தேதிதான் அரசின் செலவினங்களுக்கு சட்டமன்றம் அனுமதி வழங்கும். 1-ந்தேதியி லிருந்து 6-ந்தேதி வரை சட்டமன்றத்தின் அனுமதி இல்லாமல் எந்த அடிப்படையில் நாம் அரசின் செலவினங்களை மேற்கொள்ள உள்ளோம்?

    இந்திய அரசியலமைப்பு சட்ட ரீதியாக இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்படுவதாக தெரியவில்லை. பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் அனுமதி பெறுவதில் கால தாமதத்திற்கு என்ன காரணம்? பட்ஜெட்டிற்கான அனுமதியை மத்திய அரசுக்கு அனுப்பிய பிறகு முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் பல்வேறு கருத்துக்களை மாறி, மாறி கூறிவந்தனர்.

    மத்திய அரசின் அனுமதியை காலத்தோடு பெறுவதில் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளும் தவறிவிட்டனர். எனவே புதுவை சட்டமன்றத்தில் காலதாமதமாக பட்ஜெட்டை சமர்ப்பிக்க கூடிய சூழ்நிலை குறித்து முதல்-அமைச்சர் சபையில் விளக்க வேண்டும்.

    அரசு கொறடா அனந்த ராமன்: பட்ஜெட்டிற்கு எப்போது ஒப்புதல் அளித்தார்கள்? காலதாமதத்தின் பின்னணியில் அரசியல் உள்ளதா? எதிர்கட்சி ஆளும் மாநிலம் என்பதால் புதுவை புறக்கணிக்கப்படுகிறதா? என விளக்கம் தர வேண்டும்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி: ஆண்டு தோறும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலானது.

    நாடு முழுவதும் 7 கட்டமாக நடந்த தேர்தலில் புதுவையில் 2-ம் கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தல் நடத்தை விதிகள் மே இறுதிவரை அமலில் இருந்தது.

    இதையடுத்து அனைவரின் கருத்தையும் கேட்டு ஜூன் மாத இறுதியில் திட்டக்குழுவை கூட்ட முடிவு செய்தோம். கவர்னர் குழுவில் திட்டக்குழு கூட்டமும் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு ஜூலை 19-ந்தேதி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம்.

    யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசு ஒப்புதலை நாம் பெற வேண்டும். ரூ.8 ஆயிரத்து 425 கோடி பட்ஜெட்டில் ரூ.ஆயிரத்து 500 கோடி மானியம். இதைப்பெற மத்திய அரசு ஒப்புதல்தர வேண்டும். அதற்காக கோப்பை அனுப்பி வைத்தோம். உள்துறைக்கு பிறகு நிதித்துறைக்கு கோப்பு சென்றது. உள்துறையிலேயே நிதித்துறையின் பிரிவு உள்ளது. அங்கும் கோப்பு சென்றது.

    ஜூலை 19-ந்தேதி அனுப்பிய கோப்புக்கு கடந்த 23-ந்தேதிதான் ஒப்புதல் தரப்பட்டது. அதிகாரிகளும், அமைச்சர்களும் பேசி 33 நாள் ஆகிவிட்டது. காலத்தோடு ஒப்புதல் அளித்திருந்தால் ஜூலை மாதமே பட்ஜெட் தாக்கல் செய்திருக்கலாம். புதுவை அரசினால் எந்த காலதாமதமும் ஆகவில்லை. பாராளுமன்றம் நடந்ததால் இந்த காலதாமதம் ஏற்பட்டது. காலதாமதத்திற்கு பின்னணியில் பல காரணம் இருக்கலாம். இதை ஏற்க வேண்டிய நிலையில்தான் நாம் உள்ளோம்.

    இதற்காகத்தான் ஒட்டுமொத்தமாக மாநில அந்தஸ்து வேண்டும் என கேட்கிறோம். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி உள்ளது. பட்ஜெட் ஒப்புதல் பெறும் 6-ந்தேதி வரை அரசின் செலவினங்களையும் செய்ய முடியும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×