search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இயல்பு நிலை திரும்பியதால் கோவையில் போலீஸ் பாதுகாப்பு குறைப்பு

    கோவையில் புறநகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரின் எண்ணிக்கை ஆயிரத்திலிருந்து 500 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
    கோவை:

    கோவையில் கடந்த 22-ந் தேதி 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும் நாச வேலைக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

    இதனை தொடர்ந்து கோவை நகரில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டது. கோவை நகர் மற்றும் புறநகரில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இது தவிர கமாண்டோ படையினர், பட்டாலியன் போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருந்தனர். கோவை நகரில் 17 இடத்திலும், புறநகரில் 26 இடத்திலும் மணல் மூட்டை அடுக்கி வைக்கப்பட்ட இடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. கோவில், கிறிஸ்தவ தேவாலயம், மசூதிகள், ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர், மார்க்கெட், பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    தற்போது கோவையில் பதட்ட நிலை மாறி இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதனால் கமாண்டோ படையினர் மற்றும் பட்டாலியன் போலீசார் தங்களது முகாம்களுக்கு சென்று விட்டனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரின் எண்ணிக்கையும் நேற்று முதல் குறைக்கப்பட்டது. முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தங்களது வழக்கமான பணிக்கு திரும்பி விட்டனர்.சோதனை சாவடிகளில் மட்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    முக்கிய கோவில், கிறிஸ்தவ தேவாலயம், மசூதிகளில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவை மாநகரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தற்போது 800 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    இது தொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண் கூறியதாவது-

    கோவை நகரில் கடந்த 4 நாட்களாக நடந்த கண்காணிப்பினால் திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.

    ஆனாலும் தற்போது 800 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போக்குவரத்து சீரமைப்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை ரெட்பீல்டு பகுதியில் உள்ள விமானப்படை அலுவலகம் மற்றும் கப்பல் படை பள்ளிக்கூடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நகரில் தலைவர்களின் சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வேதாரண்யம் சம்பவத்தை தொடர்ந்து பஸ் நிலையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கல்வீச்சு உள்ளிட்ட தாக்குதல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவை புறநகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரின் எண்ணிக்கை ஆயிரத்திலிருந்து 500 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

    இதே போல் மேற்கு மண்டலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரின் எண்ணிக்கையும் 7 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா தெரிவித்தார்.
    Next Story
    ×