search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
    X
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சென்னை ஐகோர்ட்டில் சிபிஐ அறிக்கை

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை தொடர்பான அறிக்கையை சி.பி.ஐ. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    இந்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து சி.பி.ஐ. நடத்தி வரும் விசாரணையின் நிலை என்ன? இந்த சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலை என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

    ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 2018ம் ஆண்டு ஆகஸ்டு 14ந்தேதி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும், அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக 207 வழக்குகள் சி.பி.ஐ. விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது.

    மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு கேமரா பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    இந்த விசாரணை குறித்த விவரங்களை கொண்ட நிலை அறிக்கை வருகிற செப்டம்பர் 16ந்தேதி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தீவிரமாக வழக்குகளை விசாரித்து வருகிறோம்.

    துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

    கலவரத்தில் காவல் அதிகாரிகளின் பங்கு, வருவாய் துறை அதிகாரிகளின் பங்கு, போராட்டகாரர்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையை நீதிபதிகள் படித்து பார்த்தனர். பின்னர், நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் நிலை குறித்த விவரங்களை பிற்பகலில் தாக்கல் செய்வதாக அரசு பிளீடர் ஜெய பிரகாஷ் நாராயணன் கூறினார். இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

    Next Story
    ×