search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார பேருந்து
    X
    மின்சார பேருந்து

    சென்ட்ரல்-திருவான்மியூர் இடையே மின்சார பஸ்கள் 4 முறை ஓடுகிறது

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்ட்ரல் ரெயில் நிலையம் - திருவான்மியூர் இடையே இயக்கப்படும் மின்சார பஸ்கள் தினமும் காலை, மாலை என 4 முறை ஓடுகிறது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் முதல்முறையாக மின்சார பஸ்கள் சென்ட்ரல் ரெயில் நிலையம் - திருவான்மியூர் இடையே இயக்கப்படுகிறது.

    தினமும் காலை, மாலை என 4 முறை இந்த பஸ்கள் ஓடும். குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த 2 பஸ்களை அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

    ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பஸ் 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்க முடியும். 32 பயணிகள் இருக்கையில் அமர்ந்தும், 25 பயணிகள் நின்றும் பயணம் செய்யலாம்.

    இந்த பஸ்சில் மாநகர போக்குவரத்து கழகத்தின் டீலக்ஸ் பஸ் டிக்கெட் கட்டணம் போன்று ரூ.11 முதல் 25 வரை வசூலிக்கப்படும்.

    மாநகர போக்குவரத்து கழக பல்லவன் பணிமனையில் இந்த பஸ்களின் பேட்டரிகளுக்கு மின்சாரம் ரீசார்ஜ் செய்யப்படும்.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மின்சார பேருந்து

    சென்னை மாநகரத்தில் சுற்றுச்சூழல் மாசுவை தடுக்கும் விதமாக மின்சார பஸ்கள் இயக்கப்படுகிறது. குளுகுளு வசதியுடன் கூடிய இந்த பஸ்சில் ஒரே நேரத்தில் 32 பேர் அமர்ந்துகொண்டும் 25 பேர் நின்றுகொண்டும் பயணிக்கலாம்.

    சென்ட்ரல்- திருவான்மியூர் வரை இந்த பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ் பேட்டரியில் மின்சாரம் தீர்ந்தாலும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ‘ரிசர்வில்’ ஓடும் வசதி உள்ளது.

    பேட்டரியில் மின்சாரம் குறைந்துவருவது டிரைவரின் கவனத்துக்கு ‘கண்ட்ரோல்’ பேனல் மூலமாக தெரிய வரும். இந்த பஸ்சில் ஜி.பி.எஸ். வசதியும் உள்ளது.

    இதில் தானியங்கி கதவு வசதி, அவசர கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது. படிக்கட்டில் பயணம் செய்து விபத்தில் சிக்குவது குறைக்கப்பட்டுள்ளது. 300 குதிரை திறன் வசதியுடன் இந்த பஸ் செயல்படும். டீசல் என்ஜின் பஸ்கள் 180 குதிரை திறன் உடையது. மின்சார பஸ்கள் அதிவேக திறன் கொண்டது ஆகும்.

    சென்ட்ரல்- திருவான்மியூருக்கு காலை, மாலை என தினமும் 4 முறை இந்த மின்சார பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநகர போக்குவரத்து கழக புதிய மின்சார பஸ்கள் இயக்கப்படுவதை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார்.
    Next Story
    ×