search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ - திருமாவளவன்
    X
    வைகோ - திருமாவளவன்

    அம்பேத்கர் சிலை உடைப்பு - வைகோ, திருமாவளவன் கண்டனம்

    வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு வைகோ, திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை இடித்துத் தகர்க்கப்பட்ட இடத்தில் இரவோடு இரவாக புதிய சிலை ஒன்றைத் தமிழக அரசு நிறுவியிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கைக்கு ஏற்ப சிலையை நிறுவிய தமிழக அரசுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட சாதி பயங்கரவாதிகளை ஒடுக்குவதிலும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து கருத்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் எமது நன்றி. தமிழகம் சாதி, மத பயங்கரவாதிகளின் வேட்டைக்காடாக ஆகி விடக்கூடாது. தந்தை பெரியார் உழைத்து உருவாக்கிய சமூக நீதி பூமியாகவே இது தொடர வேண்டும். அதைக் காப்பதற்கு நாம் எல்லோரும் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்:-

    வேதாரண்யத்தில் காவல் நிலையத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை சில சுயநலசாதி வெறி சக்திகள் உடைப்பதும், சிலையை உடைத்து அப்புறப்படுத்தும் வரை காவல்துறை தடுத்து நிறுத்தாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதும் பல கேள்விகளை எழுப்புகிறது.

    காவல்துறையின் இந்த மெத்தனப்போக்கை வன்மையாக கண்டிப்பதுடன், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இப்பகுதியில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:-

    வேதாரண்யம் நகரில் டாக்டர் அம்பேத்கர் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிக வன்மையாக கண்டிக்கின்றது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட உரிய நடவடிக்கைகளை அரசும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும். சுமூகநிலை உருவாக அனைத்து தரப்பினரும் முன் வரவேண்டும்.

    தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர். நல்லகண்ணு, பொதுச் செயலாளர் வீரபாண்டியன்:-

    வேதாரண்யத்தில் நேற்று இளைஞர் மீது கார் மோதியது தொடர்பாக இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தில் அம்பேத்கார் சிலை அடித்து நொறுக்கப்பட்டது. அதிர்ச்சி அளிக்கிறது. இது கண்டனத்துக்குரியது.

    சிறு, சிறு பிரச்சினைகளை முன்பின் விரோதங்களை, சமூக பிரச்சினையாக, சமூக பதற்றமாக மாற்றும் முயற்சிகளை கைவிட வேண்டும். சமூக நல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் அனைவரும் சேர்ந்து பாடுபட முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    Next Story
    ×