search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
    X
    சட்டசபையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    புதுவை சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு

    அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாததை கண்டித்தும், கவர்னர் உரையை புறக்கணிப்பதாகவும் கூறி புதுவை சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

    கூட்டத்தொடரை கவர்னர் கிரண்பேடி உரையாற்றி தொடங்கி வைத்தார். கவர்னர் தனது உரையை தொடங்கிய போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் எழுந்து பேசினார். அறிவித்த எந்த திட்டத்தையும் 3 ஆண்டாக அரசு நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்கள் ஏதும் இல்லை. பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என புகார் கூறினார். ஆனால் கவர்னர் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.

    இதையடுத்து அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாததை கண்டித்தும், கவர்னர் உரையை புறக்கணிப்பதாகவும் கூறி வெளிநடப்பு செய்தார். அவருடன் சேர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

    புதுவை சட்டசபையில் கவர்னர் கிரண்பேடி உரையாற்றிய போது எடுத்த படம்.


    வெளிநடப்பிற்கான காரணம் குறித்து அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 ஆண்டாக கவர்னர் உரையில் குறிப்பிட்ட எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தவில்லை. எதற்கெடுத்தாலும் அரசியல் ரீதியில் மத்திய அரசின் திட்டங்களை கண் மூடித்தனமாக எதிர்த்து வருகின்றனர். இதனால் மாநில அரசுக்கு மத்திய அரசு திட்ட பயன்கள் சென்றடையவில்லை. வறுமையை ஒழிப்போம், வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்ற வாக்குறுதிகள் பொய்யாக்கப்பட்டுள்ளது. அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 30 மாதமாகவும், பஞ்சாலை ஊழியர்களுக்கு 15 மாதமாகவும், ரே‌ஷன்கடை ஊழியர்களுக்கு ஒன்றரை ஆண்டாகவும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு 6 மாதமாகவும், பால்வாடி ஊழியர்களுக்கு 18 மாதமாகவும், பாசிக் ஊழியர்களுக்கு 3 ஆண்டாகவும் சம்பளம் வழங்கப்படவில்லை.

    ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படவில்லை. குப்பைவரி, வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் அனைத்து துறையிலும் ஊழல் நீக்கமற நிறைந்துள்ளது.

    சட்ட ஒழுங்கு அரசு கட்டுப்பாட்டில் இல்லை. எதற்கெடுத்தாலும் கவர்னர் திட்டங்களை தடுத்து வருகிறார் என பொய்யான குற்றச்சாட்டை கூறி மக்களை காங்கிரஸ் ஏமாற்றி வருகிறது. இந்த ஆட்சியின் மீதும், சபாநாயகர் மீதும் எங்களுக்கு நம்பிக்கையில்லை. எனவே கவர்னரை குறைகூறி மக்கள் விரோத ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×