search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூரில் கிருஷ்ணர்-ராதை வேடமிட்டு ஊர்வலமாக சென்ற சிறுவர், சிறுமிகளை படத்தில் காணலாம்.
    X
    கரூரில் கிருஷ்ணர்-ராதை வேடமிட்டு ஊர்வலமாக சென்ற சிறுவர், சிறுமிகளை படத்தில் காணலாம்.

    கரூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

    கரூரில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர்.
    கரூர்:

    பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாளை கொண்டாடுகிற விழாவாக கிருஷ்ண ஜெயந்தி உள்ளது. அந்த வகையில் கரூர் மாவட்ட விசுவ இந்து பரிசத் சார்பில் கரூர் பசுபதீஸ்வரர் கோவில் முன்பாக கிருஷ்ணஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு கிருஷ்ணர் சிலை முன்பாக கோ பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. இதில் கரூர், கோவை ரோடு, திருமாநிலையூர் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலைக்கு வழிபாடு நடத்தி பக்தி பாடல்களை பாடினர். பின்னர் அந்த சிறுவர், சிறுமிகள் அங்கிருந்து புறப்பட்டு ஊர்வலமாக ஜவகர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சென்றனர்.

    அப்போது உடன் வந்த விசுவ இந்து பரிசத் அமைப் பினர் கிருஷ்ணரை போற்றி பஜனை பாடல் பாடினர். இந்த ஊர்வலமானது கரூர் பண்டரிநாதன் பஜனை மடத்தில் நிறைவடைந்தது. அங்கு கிருஷ்ணருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணர்-ராதை வேடமிட்ட குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் மேட்டு தெருவிலுள்ள ரெங்கநாதர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்ற அவர்கள், அங்கு நடந்த பூஜையில் கலந்து கொண்டனர். இதே போல், தென்னிலை, அரவக்குறிச்சி, குளித்தலை, தோகைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் விஜய், கோட்ட செயலாளர் செல்ல பாலு உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
    Next Story
    ×