search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    ஏழைகளை பற்றி கவலைப்படாதவர் ப.சிதம்பரம் - அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கு

    பணக்காரரான ப.சிதம்பரம் எப்போதுமே பணக்காரர் பக்கமே இருப்பார். ஏழைகள் பற்றி ஒருபோதும் கவலைப்படாதவர் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    மதுரை:

    மதுரை மாநகராட்சி 93-வது வார்டில் முத்துப்பட்டி- பாலரங்காபுரத்தில் மெயின் சாலை ரூ.27 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது.

    பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மாநகராட்சி மதுரை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பஸ் நிலையம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

    மீனாட்சி அம்மன் கோவில் அருகே பார்க்கிங் வசதி, வைகை கரையில் பூங்கா அமைத்து அழகு படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன.

    2 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும்போது தொன்மையான நகரம் என்ற பெயர் பெற்ற மதுரை புதுமையான நகரமாக மாறும்.

    மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் முல்லை பெரியாரில் இருந்து ராட்சத இரும்பு குழாய்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 125 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வர ரூ.1057 கோடி செலவில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    இந்த பணிகளைத் தொடர்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரையில் உள்ள முத்துப்பட்டி கண்மாய், கீழமாத்தூர் கண்மாய், மேலமாத்தூர் கண்மாய், கொடிமங்கலம் மற்றும் வைகை ஆற்றுப்பகுதியில் கருவேல மரங்களை வேரோடு பிடுங்கி அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கண்மாய்களில் கூடுதல் தண்ணீரை தேக்க முடியும்.

    தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் பலமுறை எம்.பி.யாக இருந்துள்ளார். 10 ஆண்டுகளாக உள்துறை மற்றும் நிதித்துறை மந்திரியாக இருந்துள்ளார். தமிழகத்துக்கு அவர் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அவர் நினைத்திருந்தால் தமிழகத்துக்கு நிறைய திட்டங்களை பெற்றுத்தந்திருக்கலாம். எதையுமே ப.சிதம்பரம் செய்யவில்லை.

    காரைக்குடி பகுதியில் வங்கி கிளைகளையும், ஏ.டி.எம். மையங்களையும் மட்டுமே திறந்து வைத்தார். அதுவும் இப்போது மூடிக் கிடக்கிறது.

    ப.சிதம்பரத்தை பொறுத்தவரை அவர் மக்கள் பிரதிநிதியாக இல்லாமல் மேல்மட்ட அரசியல்வாதியாக இருப்பவர். பணக்காரரான அவர் எப்போதுமே பணக்காரர் பக்கமே இருப்பார். ஏழைகள் பற்றி ஒருபோதும் கவலைப்படாதவர். எனவே தான் அவர் கைது செய்யப்பட்டபோது மக்கள் கவலைப்படவில்லை என நினைக்கிறேன்.

    தமிழகத்தில் நீட் தேர்வை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தில் உத்தரவை பெற்றவர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழக மக்கள் பற்றி எப்போதுமே சிந்திப்பதில்லை. அவர்கள் குடும்பத்தை பற்றியே சிந்திப்பார்கள்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன், அ.தி.மு.க. நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், பரவைராஜா, கருப்பசாமி, பிரிட்டோ, மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி சித்திரைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×