search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    நேரடி நெல் விதைப்பை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.600 உழவு மானியம் - முதலமைச்சர் அறிவிப்பு

    நேரடி நெல் விதைப்பை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.600 உழவு மானியமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் சுமார் 43½ லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரை ஆதாரமாக கொண்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டு தோறும் நடப்பு பருவத்தில் 13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

    மேட்டூர் அணையில் இருந்தும், கல்லணையில் இருந்தும் பாசனத்திற்காக சமீபத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி மேற்கொள்ளும் போது சுமார் 40 முதல் 45 டி.எம்.சி தண்ணீர் சேமிக்கப்படுவதோடு, நெற்பயிரும் 10 முதல் 15 நாட்கள் முன்னதாகவே அறுவடைக்கு தயாராகிவிடும்.

    இதனை முன்னெடுத்து செல்வதற்காக சி.ஆர் 1009, சி.ஆர் 1009 சப் 1, கோ 50, ஏ.டி.டி 50, டி.கே.எம். 13 போன்ற நெல் ரகங்களின் விதைகள் போதுமான அளவில் இருப்பில் வைக்க வேளாண்மை துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    நடப்பு பருவத்தில் நேரடி நெல் விதைப்பு சாகுபடியினை ஊக்குவிக்க, ஏக்கருக்கு 600 ரூபாய் வீதம் உழவு மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    அதன்படி, 5 லட்சம் ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்குவதற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாமல் இதர மாவட்ட விவசாயிகளும் நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி செய்து உழவு மானியத்தை பெற்று நீரை சேமித்து அதிக விளைச்சல் பெற கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×