search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை நகரம்
    X
    கோவை நகரம்

    பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்- கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு

    தமிழகத்தில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதால், கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளும் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் அவர்கள் அங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதையடுத்து கோவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவை விமான நிலையம், ரெயில் நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உக்கடம், கோட்டைமேடு, குனியமுத்தூர், கரும்புகடை, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்


    நேற்று இரவு 10 மணிக்கே கடைகளை அடைக்க சொல்லி போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து கடைகள் அடைக்கப்பட்டது. இரவு முழுவதும் கோவை நகரம் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சந்தேகத்துக்கிடமான பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாயுடன் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனை சாவடிகளிலும் இரவு முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தற்காலிகமாக மேலும் 10 சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    உளவுத்துறையின் எச்சரிக்கையைடுத்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி நேற்று இரவு கோவை வந்தார். அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கோவை மாநகரில் சுமார் 1000 விநாயகர் சிலைகளும், புறநகர் பகுதியில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதே போல தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஆசனூர் சோதனை சாவடி, பன்னாரி சோதனை சாவடி, பர்கூர் சோதனை சாவடி, கடம்பூர் சோதனை சாவடி , ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி என மொத்தம் உள்ள 13 சோதனை சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அனைத்து வாகனங்களையும் துப்பாக்கி ஏந்திய போலீசார் சோதனை நடத்திய பிறகே அனுப்பி வைக்கிறார்கள்.

    கடலூர் மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் அனைவரும் சரியாக உள்ளார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    கடற்கரை பகுதியிலும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×