search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம்.
    X
    கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம்.

    ப.சிதம்பரம் கைதுக்கு தலைவர்கள் கண்டனம்

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவரும் எம்.பி.யுமான திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே அவரை கைது செய்தது கண்டத்துக்குரியது.

    ப.சிதம்பரத்தை கைது செய்த விதம் அவரது நற்பெயரை கெடுக்கும் வகையில் உள்ளது. இந்த கைது நடவடிக்கை உள்நோக்கத்தோடு பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்கிறது. அமித்ஷா கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக ப.சிதம்பரத்தை கைது செய்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி:-

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை ஜனநாயத்துக்கு விரோதமாக கைது செய்துள்ளனர். முன்னாள் மத்திய மந்திரியாக இருந்தவரை எப்படி கைது செய்ய வேண்டும் என்று கடைபிடிக்காமல் அவரை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது.

    அவரது ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது அவரை கைது செய்திருப்பது கேவலமான ஒன்றாகும். விஜய்மல்லையா, நிரவ் மோடி போன்றவர்களை கைது செய்ய வக்கற்ற இந்த அரசு ப.சிதம்பரத்தை கைது செய்ததன் மூலம் எதிர்கட்சி தலைவர்களை மிரட்டிப் பார்க்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப. சிதம்பரத்தை பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    மத்திய பா.ஜ.க. அரசின் பலதரப்பட்ட தவறுகளை அறிவார்ந்த வகையில் அம்பலப்படுத்திய ப. சிதம்பரத்தின் கருத்துக்கு கருத்தியல் ரீதியாக பதில் கூற திராணியற்ற மோடி அரசின் கோழைத்தனமான செயலே ப. சிதம்பரத்தின் கைது.

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னணி உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் மீது பா.ஜ.க. அரசு சி.பி.ஐ. மூலம் வழக்குகள் தொடுத்து கைது செய்துள்ளனர்.

    சி.பி.ஐ. அதிகாரிகளுக்குக் கடமையை நிறைவேற்றிடும் பொறுப்பு உண்டு என்றாலும், இரவில் அவருடைய வீட்டின் சுவர் ஏறிக் குதித்து, சிதம்பரம் ஏதோ ஒரு பயங்கரவாதி, தீவிரவாதி, சமூக விரோதி என்ற தோற்றத்தை உருவாக்குவதுபோல நடந்து கொண்டதை, நடுநிலையாளர்களும், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்:

    ப.சிதம்பரத்தை கைது செய்த மத்திய அரசின் நடவடிக்கை நேர்மையற்ற பழிவாங்கும் நோக்கோடு நடைபெற்றுள்ளது. அவர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள சூழ்நிலையில், அவசர கதியில் அவரது வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, பயங்கரவாதியை கைது செய்வது போல சுற்றிவளைத்து கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியதாகும்.

    ப.சிதம்பரம் கைது என்பது அறிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அதிகாரம், ஜனநாயகம் இதை ரசிக்காது. வழக்கை அவர் சட்டப்படி எதிர்கொண்டு விட்டு விடுதலையாவார் என்று நம்புகிறேன்.

    Next Story
    ×