search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    தூத்துக்குடியில் இன்று வாலிபர் வெட்டிக்கொலை

    தூத்துக்குடியில் இன்று கோர்ட்டில் ஆஜராக வந்த வாலிபரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே உள்ள அய்யனடைப்பு பகுதியை சேர்ந்தவர் பச்சைக்கண். இவரது மகன்கள் முத்துக்குமார், ராம்குமார், சிவக்குமார் (வயது41). சகோதரர்கள் 3 பேரும் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் டார்லிங் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    முத்துக்குமார், ராம்குமார் ஆகிய இருவரும் வக்கீலாக உள்ளனர். சிவக்குமாருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 2005-ம் ஆண்டு தூத்துக்குடி கோரம்பள்ளத் தில் ஆத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் முதல் குற்ற வாளியாக சிவக்குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக நெல்லையில் இருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு சிவக்குமார் இன்று சென்றார். தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே அண்ணன் முத்துக்குமாரின் வக்கீல் அலுவலகம் உள்ளது. அங்கு சென்று அவரை சந்தித்து விட்டு கோர்ட்டுக்கு செல்வதற்காக மெயின் ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், சிவக்குமாரை வழிமறித்து நிறுத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வேளையில் இந்த சம்பவம் நடந்ததால் அவ்வழியாக சென்றவர்கள் பலரும் சிவக்குமாரை மர்ம நபர்கள் வெட்டுவதை பார்த்து அலறியடித்து ஓடினர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிவக்குமாரை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிவக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    சிவக்குமாரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொன்றனர்? என்பது உடனடியாக தெரியவில்லை. ஆத்திப்பழம் கொலைவழக்கு விசாரணைக்கு ஆஜராக கோர்ட்டுக்கு வந்த போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பதால், ஆத்திப்பழம் கொலைக்கு பழிக்குப்பழியாக சிவக்குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோர்ட்டில் ஆஜராக வந்தவர் போலீஸ் நிலையம் அருகில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×