search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தணியை அடுத்த பூனிமாங்காடு இருளர் காலனியில் குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    X
    திருத்தணியை அடுத்த பூனிமாங்காடு இருளர் காலனியில் குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தனியார் தண்ணீர் லாரிகள் போராட்டம் - பொதுமக்கள் எதிர்ப்பு

    தனியார் தண்ணீர் லாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    சென்னை:

    தண்ணீர் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் இன்று தொடங்கியது. இதனால் செனனையில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    நிலத்தடி நீர் எடுப்பதற்கு ஐகோர்ட்டு வழிகாட்டுதல்படி தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. தண்ணீர் கனிம வளத்தில் சேர்க்கப்பட்டதால் அரசு தவிர தனியாருக்கு உரிமை தர முடியாதுஎன்று அரசு அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

    இதன் அடிப்படையில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரி உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதனால் வழக்குகளுக்கு பயந்து தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் பணிக்கு வருவதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

    எனவே தண்ணீர் எடுக்க முறையாக அனுமதி வழங்ககோரி தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்கால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    வணிக வளாகங்கள், ஓட்டல்கள், விடுதிகள் அப்பார்ட் மெண்டுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இன்று தனியார் டேங்கர் லாரிகள் தண்ணீர் வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    தனியார் டேங்கர் லாரிகள் போராட்டம் தொடர்ந்தால் நாளை முதல் அதிக அளவு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் என தெரிகிறது.

    இதுகுறித்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் முருகன் கூறியதாவது:-

    பருவ மழை குறைவு காரணமாக தமிழகம் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    ஆனால் தண்ணீர் எடுப்பதற்கு தமிழக அரசு உரிமம் வழங்க மறுக்கிறது. நிலத்தடி நீரை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை சிறை பிடிக்கின்றனர். பல இடங்களில் டிரைவர்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது.

    சென்னை புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீரை அனுமதியின்றி எடுப்பதாக கூறி லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

    தண்ணீர் எடுக்க முறையான அனுமதி வழங்கினால் மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்வோம். அதுவரை தண்ணீர் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் 4,500 தண்ணீர் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்று உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 46 தண்ணீர் லாரிகளுக்கு ஓரிரு நாளில் லைசென்சு வழங்கப்படும். மாவட்டத்தில் 52 இடங்களில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கும் லைசென்சு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×