search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்பழகன் எம்எல்ஏ
    X
    அன்பழகன் எம்எல்ஏ

    காரைக்காலில் மணல் விற்பனையில் ஊழல்- அன்பழகன் எம்எல்ஏ பேட்டி

    காரைக்காலில் மணல் விற்பனையில் ஊழல் நடந்துள்ளது என்று அதிமுக கட்சித்தலைவர் அன்பழகன் எம்எல்ஏ கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற அதிமுக கட்சித்தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி சபாநாயகர் மீது கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கிறோம். அ.தி.மு.க. சார்பில் சபாநாயகர் மீது தனியாக ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளோம். இதற்காக தலைமைக் கழகத்தின் அனுமதி பெற்று கொண்டுவருவோம்.

    காரைக்காலில் மணல் விற்பனையில் ஊழல் நடந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டு 100 நாட்களாக வைக்கப்பட்டிருந்தது.

    இதன்பிறகு அரசு அதிகாரிகள் கமி‌ஷன் பேசி தற்போது விற்பனைக்கு அனுமதி வழங்கி உள்ளனர். தமிழகத்தில் 3 யூனிட் மணல் ஒருலோடு ரூ.28 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.

    ஆனால், புதுவையில் அதே 3 யூனிட் மணல் ரூ.39 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. மணல் தட்டுப்பாடையும், தேவையையும் பயன்படுத்தி ஒரு லோடுக்கு ரூ.10 ஆயிரம் அதிகமாக விற்பனை செய்கின்றனர். இந்த விவகாரத்தில் கவர்னர் தலையிட வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    புதுவை சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய தொடர்ந்து காலதாமதமாகி வருகிறது. இதற்கு அரசு, தலைமை செயலர், நிதி செயலர் ஆகியோரின் அலட்சியப் போக்கே காரணம். அரசின் உயர் அதிகாரிகள் சட்டமன்றத்தை மதிப்பதில்லை.

    இதேநிலை நீடித்தால் யூனியன் பிரதேசமான புதுவைக்கு சட்டமன்றம் தேவையா? என மத்திய அரசு ஆலோசிக்கும் நிலையை நாராயணசாமி ஏற்படுத்தி வருகிறார்.

    தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதி பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் பால் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    புதுவையில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். பால் விற்பனை விலையை உயர்த்துவது தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசை தொடர்ந்து குறைகூறுவதை நாராயணசாமி வாடிக்கையாக வைத்துள்ளார்.

    புதுவையில் கடந்த 3 ஆண்டில் பஞ்சாலை தொழிலாளர்கள், அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சம்பளமின்றி தவித்து வருகின்றனர்.

    7-வது ஊதியக்குழு அமல் படுத்தியதில் முரண்பாடுகள் உள்ளது. இதனால் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள், சொசைட்டி கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போராடி வருகின்றனர்.

    இதைப்பற்றி விவாதிக்க சட்டமன்றத்தை கூட்ட அரசு பயப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது எம்.எல்.ஏ. அசனா உடன் இருந்தார்.

    Next Story
    ×