search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காஞ்சிபுரம் அருகே வியாபாரி கொலையில் 9 ரவுடிகள் கைது

    காஞ்சிபுரம் அருகே வியாபாரி கொலையில் 9 ரவுடிகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள கோவிந்தவாடி அகரத்தை சுற்றியுள்ள பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக நீண்ட நாட்களாகவே புகார் உள்ளது.

    இதுதொடர்பாக போலீசில் புகார் அளிப்பதும், போலீசார் விசாரணை நடத்துவதும் தொடர்கதையாக இருந்து வந்துள்ளது.

    இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த ரவுடி புருஷோத்தமனுக்கும், கோவிந்தவாடி அகரத்தை சேர்ந்த மகாதேவன், இவரது தம்பி தனஞ்செழியன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    கடந்த ஆண்டு பாலு செட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புருஷோத்தமன் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக மோதல் வலுத்துள்ளது.

    இந்த வழக்கில் கோர்ட்டில் சாட்சி சொல்லக் கூடாது என்று புருஷோத்தமன் 2 பேரையும் மிரட்டி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவும் மகாதேவனின் வீட்டுக்கு சென்று புருஷோத்தமன் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக கோவிந்தவாடி அகரத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் நேற்று காலை 10.30 மணி அளவில் கோவிந்தவாடி அகரத்துக்கு 4 மோட்டார் சைக்கிளில் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் சென்றது. கஞ்சா போதையில் இருந்த அவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக கண்ணில்பட்டவர்களை எல்லாம் தாக்கினர்.

    பின்னர் மகாதேவனின் வீட்டு முன்பு சென்று ரகளையில் ஈடுபட்டனர். இதனை அவரது தம்பியான மளிகை கடை வியாபாரி தனஞ்செழியன் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடிக்கும்பல் தனஞ்செழியனை சரமாரியாக வெட்டியது.

    இதில் அவருக்கு கழுத்தில் பலத்த வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து அவர் பலியானார்.

    ரவுடிகள் தாக்கியதில் சஞ்சீவிராயன், ராதா, தட்சிணா மூர்த்தி, யதேந்திரன், சுபாஷினி, தேவகி ஆகிய 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கஞ்சா போதையில் அட்டூழியம் செய்த கும்பல், பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றது. போகும் வழியிலும் சாலையில் சென்றவர்களிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பாலுசெட்டி சத்திரம் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் கொலைவெறி தாக்குதல் சம்பவம் தொடர்பாக ரவுடி புருஷோத்தமன் உள்பட 9 ரவுடிகள் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். கைதான ரவுடிகளிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவிந்தவாடி அகரத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளை களையெடுக்க சூப்பிரண்டு கண்ணன் அதிரடி நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.
    Next Story
    ×