search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் பாண்டியராஜன்
    X
    அமைச்சர் பாண்டியராஜன்

    மேலும் 5 பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை தொடர்ந்து மேலும் 5 பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் அமெரிக்க துணை தூதரக கட்டிடத்தை 1969-ம் ஆண்டு நடமாடும் பல்கலைக்கழகம் என்று அறியப்பட்ட நெடுஞ்செழியன் திறந்துவைத்தார். இந்திய பாரம்பரியத்தையும், அமெரிக்க உறவுகளையும் வெளிக்கொணரும் வகையில் அமெரிக்க தூதரகத்தில் உள்ள நூலகத்தில் புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. என்னுடைய அனுபவத்தில் அமெரிக்கா வேற்றுமை பாராட்டாத நாடாக விளங்குகிறது.

    இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் வர்த்தகம், பண்பாடு, கல்வி உள்பட பல்வேறு ரீதியிலான தொடர்புகள் இருந்து வருகிறது. இந்தியாவை சேர்ந்த ஒரு லட்சத்து 95 ஆயிரம் மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கிறார்கள். அதில் தமிழகத்தில் இருந்து அதிகமானோர் படிக்கிறார்கள். அங்கு வசிக்கும் 30 லட்சம் இந்தியர்களில், சுமார் 6 லட்சம் பேர் தமிழர்கள்.

    தமிழக அரசு

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாயும், மீதமுள்ள 40 கோடி ரூபாய் 9,600 தமிழர்களாலும் அளிக்கப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த கல்வியாண்டில் அதை நடைமுறைப்படுத்திவிடுவார்கள்.

    6 ஆராய்ச்சி திட்டங்கள் எடுக்கப்போகிறார்கள். தமிழ் அறியாதவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் பணி, தமிழ் நூலகமும் வலுப்படுத்தப்பட உள்ளது. ஒரு பேராசிரியர், 6 ஆராய்ச்சி மாணவர்கள் இருப்பார்கள். இந்த துறைக்கு தலைவராக சிங்கப்பூர் தமிழர் அம்ருத் நியமிக்கப்பட்டுள்ளார். என்ன ஆய்வுகள் செய்யலாம்? என்று நாங்கள் யோசனை கூறி இருக்கிறோம். ஆனால் அதன் முடிவை ஹார்வர்டு பல்கலைக்கழக ‘டீன்’ தான் எடுப்பார்.

    இந்தியாவுக்கு வெளியே 30 இடங்களில் தமிழ் இருக்கை இருக்கிறது. மேலும் 5 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை உருவாக்குவதற்கு தமிழக அரசு முயற்சித்து வருகிறது. அதில் லண்டன் பல்கலைக்கழகத்தில் இன்னும் ஒருவாரத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது. இதேபோல யாழ்ப்பாணம், மலேசியா, தென் ஆப்பிரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறோம். இந்த ஆண்டில் 5 பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமையும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×