search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்களை படத்தில் காணலாம்.
    X
    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்களை படத்தில் காணலாம்.

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    சுடுகாட்டிற்கு நிரந்தர பாதை அமைத்து தரக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் பொதுமக்கள் திரண்டு வந்து தங்களது பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு செல்வதற்கு நிரந்தர பாதை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்களில் சிலர் சென்று கோரிக்கை தொடர்பான மனுவினை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு செல்லுமாறு கூறியதை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

    தொடர்ந்து எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு செல்வதற்கு நிரந்தர பாதை அமைத்து தர வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபாடில்லை. இதனால் நாங்கள் சிட்கோ தொழிற்பேட்டைக்குரிய பாதையை சுடுகாட்டிற்கும், விவசாய விளை நிலங்களுக்கும் மற்றும் வேலைக்கும் சென்று வருவதற்கும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது அந்த பாதையை கேட் போட்டு அடைக்கப்பட உள்ளதால் எங்களுக்கு இடையூறு ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் இருந்து சுடுகாட்டிற்கும், விவசாய விளை நிலங்களுக்கும், வேலைக்கும் சென்று வருவதற்கும் நிரந்தர பாதை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதேபோல் ஆலத்தூர் தாலுகா, செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்ட எல்லையில் உள்ள திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா ஸ்ரீதேவிமங்கலம் (வடக்கு) கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் சேர்ந்து கொடுத்த மனுவில், எங்கள் கிராமங்களுக்கு இடையில் இயங்கி வரும் கல்குவாரியினால் அருகே உள்ள வீடுகள், கிணறுகளின் சுற்றுச்சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த கல்குவாரியை மூட வேண்டும் என்று கடந்த 5-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும், அதிகாரிகள் இதுவரை விசாரணை கூட நடத்தவில்லை. இனியும் அதிகாரிகள் விசாரணை நடத்த காலதாமதம் படுத்தினால் போராட்டத்தில் ஈடு படுவோம். எனவே உடனடியாக அந்த கல்குவாரியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    குன்னம் தாலுகா திருமாந்துறை முகமது நகர் பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் வசதி, சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர், தார் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

    வேப்பந்தட்டை தாலுகா, சின்னாறு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை 2016-ம் ஆண்டில் இருந்து வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அந்த கட்டிடத்திற்கு வாடகை கட்டணம், மின்சார கட்டணம் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது அந்த வாடகை கட்டணம், மின்சார கட்டணத்தை எங்களால் செலுத்த முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பகுதி நேர ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என்றும், மேலும் சின்னாறு ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், அதற்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களையும் தூர்வாரி, ஏரியை சுற்றி முள்வேலி அமைக்கவும் நடவடிகை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக நிலம் கொடுத்த உரிமையாளர்கள் கொடுத்த மனுவில், 2007-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக தமிழக அரசு, ஒரு தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து விவசாயிகளிடம் நிலங்களை வாங்கியது. ஆனால் இதுவரை சிறப்பு பொருளாதாரம் மண்டலம் அமைக்கப்படவில்லை. இதனால் எங்கள் நிலத்தை திரும்ப ஒப்படைக்க கோரியும், மேலும் அந்த தனியார் நிறுவனமிடம் இருந்து நஷ்டஈடு பெற்று தரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
    Next Story
    ×