search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் சோதனை
    X
    போலீஸ் சோதனை

    2 மாதத்தில் 3 மாணவர்கள் தற்கொலை: சென்னை என்ஜினீயரிங் கல்லூரியில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சோதனை

    சென்னை என்ஜினீயரிங் கல்லூரியில் 2 மாதத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அந்த கல்லூரியில் சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    சென்னையை அடுத்துள்ள மறைமலைநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பொத்தேரியில் எஸ்.ஆர்.எம். என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களிலும் இருந்தும் வந்துள்ள மாணவ-மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அனுபிரியா (21) என்ற மாணவியும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். கடந்த மே மாதம் 26-ந்தேதி கல்லூரியில் 10-வது மாடிக்கு சென்ற இவர் அங்கிருந்து திடீரென கீழே குதித்தார்.

    இதில் உடல் சிதறிய அனுபிரியா சம்பவ இடத்திலேயே பலியானார். இது சக மாணவிகள் மற்றும் அனுபிரியாவின் தோழிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மாணவி அனுபிரியாவின் தற்கொலையில் மர்மம் நீடித்த நிலையில் அதன் பின்னணி தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் அனுபிரியா தற்கொலை செய்த மறுநாள் (மே மாதம் 27-ந்தேதி) ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனித்சவுத்ரி (19) என்ற மாணவர் கல்லூரி வளாகத்தில் விடுதியின் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதற்கிடையே கடந்த மாதம் 15-ந்தேதி குமரி மாவட்டத்தை சேர்ந்த தர்சன் என்ற மாணவரும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்.

    எஸ்.ஆர்.எம். கல்லூரி வளாகத்தில் ஒரு மாணவியும், 2 மாணவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவர்களின் மர்ம மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து கடந்த மாதம் 17-ந்தேதி 3 மாணவர்கள் மரணம் தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுதொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்தனர். மறைமலைநகர் போலீசார் நடத்திய விசாரணை விவரங்களையும் கேட்டு பெற்றனர்.

    கடந்த ஒரு மாதமாக ரகசியமாக விசாரணை நடத்தி வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று காலை பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    மாணவி அனுபிரியாவும், மற்ற 2 மாணவர்களும் தற்கொலை செய்து கொண்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதுபற்றிய விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு மல்லிகா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் படையுடன் சென்று கல்லூரி விடுதியிலும், மாணவ- மாணவிகளிடமும் விசாரித்தார்.

    அப்போது அவர்கள் தெரிவித்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துகொண்டனர்.

    எஸ்.ஆர்.எம். கல்லூரியில் 2 மாதத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    மாணவி அனுபிரியாவின் நெருங்கிய தோழிகளிடமும், 2 மாணவர்களின் நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தற்கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு சி.பி.சி. ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதன் முடிவில் மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று நடத்திய திடீர் சோதனை எஸ்.ஆர்.எம். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மறைமலை நகர் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர்களின் மரணத்துக்கான காரணம் வெளிவரவில்லை. சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதனை எப்படி வெளிக்கொண்டு வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பும் மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.
    Next Story
    ×