search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சிலைகள்
    X
    விநாயகர் சிலைகள்

    கரூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

    கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. தற்போது அந்த சிலைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு அலங்கார ஒப்பனைகள் செய்யப்பட்டு வருகிறது.
    கரூர்:

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் அன்றைய நாளில் களிமண் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்து பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி கரூர் திருமாநிலையூர் சுங்ககேட் பகுதியில் பொம்மைகள் செய்து பிழைப்பு நடத்தி வரும் ராஜஸ்தானை சேர்ந்த சத்ராராம் என்கிற தொழிலாளி தனது குடும்பத்துடன் சேர்ந்து தற்போது விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    வீட்டில் வைத்து பூஜை செய்யும் வகையில் சிறிய அளவிலான சிலைகள் மற்றும் 4 அடியிலிருந்து 9 அடி உயரம் வரையிலான பெரிய சிலைகளும் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். பெரிய விநாயகர் சிலைகள் ரூ.16 ஆயிரம், ரூ.12 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.8 ஆயிரம் என்கிற விலையில் விற்கப்படுகிறது. கையில் தூக்கி செல்லும் வகையிலான சிறிய சிலைகள் ரூ.150 முதல் ரூ.ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாக்பீஸ் தயாரிக்கப்படும் மாவினை கொண்டு இந்த சிலைகள் உருவாக்கப்படுவதால் நீர்நிலைகளில் பிரதிஷ்டை செய்யும்போது சுற்றுப்புறத்திற்கு தீங்கு ஏதும் ஏற்படாது என சிலைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    பக்தர்களுக்கு பிடித்த வகையில் யானைமுக விநாயகர், வெற்றிவிநாயகர், எலி-புலியின் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர், ராஜவிநாயகர், சுயம்புவிநாயகர், கற்பக விநாயகர் என பல்வேறு வகையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு வருவதால் கரூர், குளித்தலை, மாயனூர், நெரூர், வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    இதே போல் இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் 200 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட இருப்பதையொட்டி கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. தற்போது அந்த சிலைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு அலங்கார ஒப்பனைகள் செய்யப்பட்டு வருகிறது. செப்டம்பர் 2-ந்தேதி வேலாயுதம்பாளையத்தில் நடைபெறுகிற வழிபாட்டில் இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் பங்கேற்க உள்ளார். இதனால் சிலைகளை வழிபாட்டிற்கு அனுப்பி வைக்கும் பணியில் இந்து முன்னணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×